ஆந்திரா மற்றும் ஒடிசா கடலோரப் பகுதிகளில் நிலவும் வளிமண்டலச் சுழற்சி மற்றும் வெப்பச் சலனம் காரணமாக தமிழகத்தில் 8 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்ட அறிவிப்பு:
''ஆந்திரா மற்றும் ஒடிசா கடலோரப் பகுதிகளில் நிலவும் வளிமண்டலச் சுழற்சி மற்றும் வெப்பச் சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், சேலம், தருமபுரி மாவட்டங்கள் மற்றும் புதுவைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸும் இருக்கக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச மழை பெய்த விவரம்:
ஏற்காடு (சேலம்) 9 செ.மீ., மே.மாத்தூர் (கடலூர்) 6 செ.மீ., நெய்வேலி (கடலூர்) வேப்பூர் (கடலூர்) தலா 5 செ.மீ., சேலம், பாப்பிரெட்டிப்பட்டி (தருமபுரி) கடலூர் தலா 4 செ.மீ., கொள்ளிடம் (நாகப்பட்டினம்), தருமபுரி, உளுந்தூர்பேட்டை (கள்ளக்குறிச்சி) தலா 3 செ.மீ.
மீனவர்களுக்கான எச்சரிக்கை
அக்டோபர் 3 அன்று அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
அக்டோபர் 3 முதல் அக்டோபர் 5 வரை வடமேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய ஒடிசா கடலோரப் பகுதிகளில் சூறாவளிக் காற்று 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும்.
மீனவர்கள் மேற்கண்ட பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
கடல் உயர் அலை முன்னறிவிப்பு எதுவும் இல்லை”.
இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.