மண் எடுக்க அனுமதிக்காததால் கன்னியாகுமரி மாவட்டத்தில் செங்கல் சூளை பணிகள் முடங்கியுள்ளன. இதனால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் எழுந்துள்ளது.
இதுகுறித்து, 'இந்து தமிழ்' இணையதளத்திடம் கன்னியாகுமரி எம்எல்ஏ ஆஸ்டின் கூறுகையில், "கன்னியாகுமரி சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட ஆரல்வாய்மொழி, தோவாளை, செண்பகராமன்புதூர், தாழக்குடி, சந்தைவிளை, துவரங்காடு, நாவல்காடு, ஞானதாசபுரம், இறச்சகுளம், முக்கடல், ராஜாவூர், நிலப்பாறை, மகாராஜபுரம், ராமானாதிச்சன்புதூர், கொட்டாரம் உள்ளிட்ட பல கிராமங்களில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட செங்கல் உற்பத்தி நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.
இதில், நேரடியாக சுமார் 20 ஆயிரம் தொழிலாளர்களும், 5,000 புலம் பெயர்ந்த தொழிலாளர்களும் பணிபுரிந்து வருகின்றனர். தற்போது, செங்கல் சூளைக்குத் தேவையான மண்ணை தனியார் பட்டா நிலங்களில் அரசு அனுமதி மூலமாகவும், குளங்கள் தூர்வாரும் காலங்களில் அரசு கொடுக்கும் அனுமதிச் சீட்டின் மூலமாகவும் எடுத்துப் பயன்படுத்தி வந்தனர். கடந்த ஓராண்டாக மேற்கூறிய வழிகளில் அரசு அனுமதி வழங்குவதை நிறுத்திவிட்டது.
இதனைத் தொடர்ந்து, கடந்த ஆகஸ்ட் முதல் நெல்லை மாவட்டம் பழவூர் பகுதியில் இருந்து மண் எடுப்பதையும் அரசு தடை செய்துள்ளது. இதனால் அனைத்து செங்கல் தயாரிப்பு நிலையங்களும் மாற்று வழியில்லாமல் தொழில் முடங்கிப் போயுள்ளது. தொழில் இல்லாததால் சுமார் 20 ஆயிரம் தொழிலாளர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகியுள்ள நிலையில் செங்கல் விலையும் உயர வாய்ப்புள்ளது.
தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு மீண்டும் செங்கல் உற்பத்தி தடையில்லாமல் செய்யும் வகையில் தனியார் பட்டா நிலங்களில் மண் எடுப்பதற்கான அனுமதி வழங்க வேண்டும். அதுபோல, குளங்களை ஆய்வு செய்து மண் எடுப்பதற்கு அரசு நிர்ணயம் செய்யும் அளவுக்குக் குளங்களை ஆழப்படுத்தி அதனை செங்கல் சூளைக்குப் பயன்படுத்துவதற்கு அனுமதிச் சீட்டு வழங்க வேண்டும்" என்றார்.