தமிழகம்

மாநில அரசுகளின் அதிகாரங்கள் பறிபோகாத வகையில் வேளாண் சட்டங்களில் மாற்றம் தேவை: முதல்வருக்கு பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் வெளியிட்ட அறிக்கை:

மத்திய அரசு கொண்டு வந்துள்ள, 3 வேளாண் சட்டங்களும் விவசாயிகளுக்கு பேரழிவைஏற்படுத்தக் கூடியவை. வேளாண் துறை மாநிலப் பட்டியலில் இருக்கும் நிலையில் மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்கள் மாநில அரசுகளின் உரிமைகளை பறிக்கும் வகையில் உள்ளது.

புதிய சட்டங்களின் மூலம் உற்பத்தி, விலை நிர்ணயம், விற்பனைஎன்று அனைத்தையும் கார்ப்பரேட் நிறுவனங்களே முடிவு செய்யும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

உற்பத்தி செலவைக் கணக்கிட்டு லாபகரமான விலை நிர்ணயம் செய்வதற்கான வாய்ப்புகள் அடியோடு மறுக்கப்படும்.

விவசாயிகளிடம் ஒப்பந்தம் செய்து கொள்ளும் கார்ப்பரேட் நிறுவனங்கள், மிக குறைந்த விலைக்கு விவசாயிகளிடம் கொள்முதல் செய்து, இருப்பு வைத்து தட்டுப்பாடு உள்ள பகுதிகளில் பல மடங்கு அதிக விலைக்கு விற்கவே இச்சட்டங்கள் வழிவகுக்கும், குறிப்பாக இந்த சட்டங்கள் பதுக்கல்காரர்களுக்கு பாதுகாப்பானதாக இருக்கும்.

பேரிடர் காலங்களிலும், உணவு தட்டுப்பாடு ஏற்படும்போதும் இருப்பில் உள்ள பொருளை மக்களுக்கு விநியோகிக்கும் அதிகாரம் மாநில அரசுகளுக்கு உள்ளது. புதிய சட்டங்கள் மூலம் இந்த அதிகாரம் பறிக்கப்படுகிறது.

ஒப்பந்த சாகுபடி என்ற பெயரில் கார்ப்பரேட் நிறுவனங்கள் விவசாயிகளை அடிமைப்படுத்தும்.

கிடங்குகளில் இருப்பு வைப்பதற்கான கட்டுப்பாடுகளை தளர்த்த கூடாது. தட்டுப்பாடு காலத்தில் உணவுப் பொருட்களை விநியோகிக்கும் மாநில அரசுகளின் அதிகாரத்தை பறிக்கக்கூடாது போன்ற கோரிக்கைகளை பிரதமருக்கு எழுத்துப்பூர்வமாக முதல்வர் தெரிவிக்க வேண்டும். இதன் அடிப்படையில் சட்டத்தில் மாற்றங்கள் கொண்டு வரும்போது விவசாயிகள் ஏற்றுக் கொள்வதில் எந்த தயக்கமும் இல்லை.

எனவே, இதுகுறித்து மத்திய, மாநில அரசுகள் மறுபரிசீலனை செய்து விவசாயிகளுக்கு பாதுகாப்பான கொள்கைத் திட்டங்களை மத்திய அரசு உருவாக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT