தமிழகம்

டெல்லியில் பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவுடன் எல்.முருகன் சந்திப்பு: தமிழக அரசியல் நிலவரம் குறித்து ஆலோசனை

செய்திப்பிரிவு

கூட்டணி கட்சியான அதிமுகவில் உள்கட்சி குழப்பம், பாஜக தேசிய நிர்வாகிகள் நியமனத்தில் தமிழகம் புறக்கணிப்பு, நெருங்கும் சட்டப்பேரவைத் தேர்தல் என்ற பரபரப்பான அரசியல் சூழலில் பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவை அக்கட்சியின் தமிழகத் தலைவர் எல்.முருகன் டெல்லியில் நேற்று சந்தித்துப் பேசினார்.

சுமார் 1 மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற இந்த சந்திப்பின்போது, நடப்பு அரசியல் நிலவரங்கள், தமிழக சட்டப்பேரவை தேர்தல் தொடர்பாக இருவரும் ஆலோசனை நடத்தியுள்ளனர்.

பாஜக தேசிய நிர்வாகிகள் பட்டியல் கடந்த 26-ம் தேதி வெளியிடப்பட்டது. அதில் தமிழகத்தை சேர்ந்த யாகும் இடம்பெறவில்லை. கடந்த 6 ஆண்டுகளாக தேசிய செயலாளராக இருந்த ஹெச்.ராஜா, தமிழகப் பொறுப்பாளராக இருந்த பி.முரளிதரராவ் ஆகியோருக்கு எந்தப் பொறுப்பும் வழங்கப்படவில்லை. இன்னும் 6 மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடக்க உள்ள நிலையில், தமிழக நிர்வாகிகளை பாஜக மேலிடம் புறக்கணித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கூட்டணி குறித்து பேச்சு

இதற்கிடையில், கூட்டணி கட்சியான ஆளும் அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் யார், கட்சித் தலைமை யார் என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது.

தேர்தலில் இது எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும், மாற்று அணி அமைக்க நேரிடுமா, ரஜினி கட்சி தொடங்கினால் ஏற்படப்போகும் அரசியல் மாற்றங்கள், அவர் கட்சி தொடங்காவிட்டால் எந்தெந்த கட்சிகளை கூட்டணியில் இணைப்பது என்பது குறித்து இருவரும் பேசியதாக பாஜக நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.

பாஜக தேசிய செயற்குழு இன்னும் சில நாட்களில் மாற்றி அமைக்கப்பட உள்ளது. இளைஞர் அணி, மகளிர் அணி போன்ற அணிகள், பிரிவுகளில் தேசிய நிர்வாகிகளும் நியமிக்கப்பட உள்ளனர்.

நிர்வாகிகள் நியமனம்

மத்திய அரசின் பல்வேறு வாரியங்கள், அமைப்புகளுக்கும் நிர்வாகிகள் நியமிக்கப்பட உள்ளனர். தமிழகத்தில் இருந்து யார் யாரை இப்பொறுப்புகளுக்கு நியமிக்கலாம் என்பது குறித்தும் இந்தச் சந்திப்பில் பேசப்பட்டதாக கூறப்படுகிறது.

தமிழகத்தில் இருந்து தேசிய நிர்வாகிகள் யாரும் இல்லாததால் மாநிலத் தலைவர் எல்.முருகன், மாநில அமைப்புப் பொதுச் செயலாளர் கேசவ விநாயகன் ஆகியோரே அனைத்து முடிவுகளையும் எடுக்கும் நிலையில் உள்ளனர். இத்தகைய சூழலில், நட்டா - முருகன் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

SCROLL FOR NEXT