சென்னையில் தேனாம்பேட்டை, அடையார் மண்டலங்களில் தற்போது கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இந்நிலையில் மாநகரம்முழுவதும் இயங்கும் அரசு, தனியார் அலுவலகங்கள் மற்றும் வணிக நிறுவனங்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்த மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது.
சென்னையில் கடந்த ஒரு மாதமாக கோடம்பாக்கம், அண்ணாநகர் ஆகிய மண்டலங்களில் மட்டுமே கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. இரு மண்டலங்களிலும் தலா 1000-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வந்தனர்.
அப்போது மாநகரம் முழுவதும் தினமும் புதிதாக தொற்றுக்கு உள்ளாவோரின் எண்ணிக்கை 1000-க்குள்இருந்தது. தற்போது தினமும் 1200-க்கு மேல் பதிவாகி வருகிறது. இதில் தேனாம்பேட்டை, அடையார் மண்டலங்களில் கரோனா தொற்று அதிகரித்துள்ளது.
கடந்த செப்டம்பர் 20-ம் தேதி தேனாம்பேட்டை மண்டலத்தில் 759, அடையார் மண்டலத்தில்861 பேர் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்தனர். நேற்றைய நிலவரப்படி தேனாம்பேட்டை மண்டலத்தில் 1,147 பேரும், அடையார் மண்டலத்தில் 1,072 பேரும் சிகிச்சைபெற்று வருகின்றனர்.
ஒருங்கிணைப்பு அலுவலர்
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:
தற்போது சென்னையில் சுமார்80 சதவீத அலுவலகங்கள் மற்றும்நிறுவனங்கள், 100 சதவீத பணியாளர்களுடன் இயங்கி வருகின்றன.
இதனால் தொற்று அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. எனவே மாநகரப் பகுதிகளில் சுமார் 20 பேருக்கு மேல் பணிபுரியும் அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், வங்கிகள், வணிக நிறுவனங்களில் தலா ஒரு நபரை ஒருங்கிணைப்பு அலுவலராக நியமித்து, வாரந்தோறும், அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் முறையாக கடைபிடிக்கப்படுகிறதா என ஆய்வுசெய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம். விதிகளை மீறுவோருக்கு அபராதம் விதிப்பதும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
வீடு வீடாக பரிசோதனை செய்வது,காய்ச்சல் முகாம்களை அதிகப்படுத்துவது, பரிசோதனை மாதிரிகள் சேகரிப்பை அதிகப்படுத்துவது போன்ற நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறோம்.
இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.
தேனாம்பேட்டை மண்டலத்தில் 1,147 பேரும், அடையார் மண்டலத்தில் 1,072 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்