தமிழகம்

கோவை, மதுரை உட்பட 35 மாவட்டங்களில் தோட்டக்கலை விற்பனை மையம்: தரமான காய்கறிகள், பழங்கள் கிடைக்கும்

டி.செல்வகுமார்

தமிழகத்தில் 35 மாவட்ட தலைநகரங்களில் தோட்டக்கலைத் துறைவிற்பனை மையம் தொடங்கப்பட்டுள்ளது.

கரோனா காலத்தில் விவசாயிகளிடம் இருந்து பொதுமக்களுக்கு தோட்டக்கலைத் துறை பொருட்கள் சென்றடைய தமிழக தோட்டக்கலைத் துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. இ-தோட்டம் இணையதளம் மூலம் காய்கறிகள், பழங்கள் வீடுகளுக்கே சென்று வழங்கப்பட்டன. மேலும் தோட்டக்கலைத் துறை பொருட்களை நேரடியாக விற்பனை செய்ய சென்னையில் 2 இடம் மற்றும் கோவை, திருச்சி, சேலம், மதுரை ஆகிய 6 இடங்களில், ‘மினி ஷாப்பிங் மால்’ அமைக்கும் பணிகளும் வேகமாக நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் கோவை, சேலம் உட்பட 35 மாவட்ட தலைநகரங்களில் உள்ள தோட்டக்கலைத் துறை தலைமை அலுவலக வளாகங்களில் ‘தோட்டக்கலைத் துறை விற்பனை மையம்’தொடங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தோட்டக்கலைத் துறை உயர் அதிகாரி கூறியதாவது:

சென்னையில் செம்மொழிப் பூங்கா, மாதவரம் ஆகிய இடங்களில் தோட்டக்கலைத் துறைபொருட்கள் விற்பனை செய்யப்படுவதைப் போல, 35 மாவட்டதலைநகரங்களில் உள்ள தோட்டக்கலைத் துறை தலைமை அலுவலகங்களான துணை இயக்குநர், உதவி இயக்குநர் அலுவலக வளாகத்தில் தோட்டக்கலைத் துறை விற்பனை மையம் திறக்கப்பட்டுள்ளது.

அரசு தோட்டக்கலைத் துறைக்கு சொந்தமான 65 பண்ணைகளில் விளையும் பொருட்கள், 45 உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களின் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களான குக்கீ்ஸ், பிஸ்கட் உள்ளிட்ட நொறுக்குத் தீனி வகைகள், விவசாயிகளின் விளைபொருட்கள் ஆகியவை விற்பனை செய்யப்படுகின்றன.

விற்பனை மையங்கள் காலை 10 முதல் மாலை 6 மணி வரை செயல்படும். தோட்டக்கலைத் துறை பண்ணைகள் மற்றும் இத்துறைக்கு சொந்தமான பூங்காக்களிலும் விற்பனை மையம் அமைக்கப்பட்டுள்ளது.

உதாரணத்துக்கு ஊட்டியில் உள்ள தாவரவியல் பூங்கா,ரோஜா தோட்டம், தொட்டபெட்டா தோட்டம், குன்னூர் சிம்ஸ் பூங்கா, காட்டேரி பூங்கா, பர்லியாறு, கல்லாறு தோட்டங்கள், கொடைக்கானல், ஏற்காடு, குற்றாலம், கன்னியாகுமரி ஆகிய இடங்களில் உள்ள பூங்காக்களில் தரமான பசுந்தேயிலை, சிக்கரிகலக்காத காபித் தூள், சாக்லேட், தேன், பழச்சாறுகள், ஜாம்,ஊறுகாய் ஆகியன நியாயமான விலையில் விற்பனை செய்யப்படுகின்றன. புதிய மாவட்டங்களில் விரைவில் விற்பனை மையம் திறக்கப்படும்.

இவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்தார்.

SCROLL FOR NEXT