தமிழகம்

திமுக காலிப்பானை: வருவாய்துறை அமைச்சர் கிண்டல்

செய்திப்பிரிவு

திமுக காலிப்பானை என்று வருவாய்துறை அமைச்சர் ஆர்பி.உதயகுமார் தெரிவித்தார்.

அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கிராமசபை கூட்டம் நடத்த முன் எச்சரிக்கையுடன் கள நிலவரங்களை ஆராய்ந்த போது தற்போது உள்ள கரோனா சூழலில் நடத்துவது சரியில்லை என்று தோன்றியது. மக்களை காக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது. அதனால் தற்காலிகமாக நடத்தப்படவில்லை. இது மக்கள் நலன் சார்ந்த முடிவாகும். எதிர்க்கட்சிகள் இதற்கு அரசியல் சாயம் பூசி வருவது நியாயம் அல்ல. எம்ஜிஆர் சத்துணவு திட்டம் கொண்டுவந்தார் அதை ஐ.நா பாராட்டியது. அதைத்தொடர்ந்து ஜெயலலிதா கொண்டு வந்த தொட்டில் குழந்தை திட்டத்தை உலகமே பாராட்டியது.

இந்த இயக்கத்தில்தான் வலிமையுள்ள தலைவர்கள், வரலாற்று திட்டங்கள் உள்ளன. ஆனால் திமுகவில் எதுவும் சொல்வதற்கு இல்லை. காலி பானையாக உள்ளது. முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் ராமர் லட்சுமணன் போல் செயல்பட்டு ஒரு தாய் வயிற்றில் பிறந்த பிள்ளைகளை ஒற்றுமையுடன் உள்ளனர்.

அதிமுகவில் ஆரோக்கியமான கருத்து ஒற்றுமை ஏற்பட்டு தேர்தலை சந்திப்போம்.

மக்கள் எதிர்பார்க்கின்ற தீர்ப்பினை வரும் 7ம் தேதி ஒருமித்த கருத்தோடு நல்ல தீர்ப்பை அறிவிப்பார்கள். முதல்வர், துணை முதல்வருக்குமிடையே எந்தவித சர்ச்சையும் இல்லை. வரும் 7ம் தேதி தலைமை அறிவிக்கும் கருத்துக்கு ஒன்றரை கோடி தொண்டர்களும் கட்டுப்படுவார்கள்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT