புதுச்சேரியில் ஏசியினுள் பல மாதங்கள் பதுங்கியிருந்த சாரைப் பாம்பை வனத் துறையினர் பிடித்தனர்.
புதுச்சேரி பிள்ளையார்குப்பத்தில் ஏசியில் பாம்பு இருப்பதாகச் சந்தேகம் ஏற்பட்டுச் சாமி என்பவர் வனத்துறைக்குப் புகார் தெரிவித்தார். இதையடுத்து வனத்துறை ஊழியர் கண்ணதாசன் அங்கு சென்றார். ஏசியினுள் பாம்பு இருப்பது உறுதியானது. இதைத் தொடர்ந்து அரைமணி நேரம் போராடி ஊழியர், 3 அடி நீளம் உடைய சாரைப்பாம்பை பிடித்தார்.
இதுபற்றி கண்ணதாசன் கூறியதாவது:
ஏசியினுள் சாரைப் பாம்பு பல மாதங்களாக இருக்க வாய்ப்பு உள்ளது. ஏனெனில் ஏசியினுள் பாம்பு தனது சட்டையை உரித்திருந்தது. குளிருக்கு இதமாக இருந்ததால் பாம்பு ஏசியினுள் சென்றிருந்தது தெரிந்தது. வீட்டில் இருப்போர் நீண்ட நாட்களாக ஏசியைப் பயன்படுத்தாமல் இருந்துள்ளனர். அதில் சத்தம் கேட்டதால் தகவல் தெரிவித்தனர். நாங்கள் வந்து பாம்பைப் பிடித்தோம்.
பாம்பு எப்படி வந்தது என்பதை ஆராய்ந்தோம். ஏசிக்கான காப்பர் வயர் வரும் பாதைக்குப் போடப்பட்ட துளையை மூடாமல் இருந்துள்ளனர். அதன் மூலம் ஏசிக்குள் பாம்பு வந்தது தெரிந்தது" என்று குறிப்பிட்டனர்.
அவ்வீட்டைச் சேர்ந்தோர் கூறுகையில், "ஏசி இயந்திரத்தினுள் இருந்து சத்தம் வந்தது. அதில் எலி இருக்கலாம் என்று கருதி ஏசியைப் பயன்படுத்தாமல் இருந்தோம். தற்போது அச்சத்தம் வித்தியாசமாக இருந்ததால் வனத்துறைக்குப் புகார் தெரிவித்தோம். நல்லவேளை பாம்பைப் பிடித்து விட்டனர்" என்று சந்தோஷமாகக் குறிப்பிட்டனர்.