திண்டுக்கல் நகரில் திமுகவினரால் கிழிக்கப்பட்ட லியோனியின் போஸ்டர்.  
தமிழகம்

திண்டுக்கல்லில் லியோனி போஸ்டரைக் கிழித்த திமுகவினர்: துணைப் பொதுச்செயலாளர் படம் இடம்பெறாததால் ஆத்திரம் 

பி.டி.ரவிச்சந்திரன்

திமுகவில் புதிதாகப் பதவி வழங்கப்பட்ட திண்டுக்கல் ஐ.லியோனி கட்சித் தலைமைக்கு நன்றி தெரிவித்து திண்டுக்கல் நகரில் ஒட்டியிருந்த போஸ்டரில் திமுக மாநிலத் துணைப் பொதுச்செயலாளர் ஐ.பெரியசாமி படம் இடம்பெறாததால் ஆத்திரமடைந்த திமுக தொண்டர்கள் போஸ்டரில் இருந்த லியோனியின் பெயர், படத்தை மட்டும் கிழித்தனர்.

திமுக கொள்கை பரப்புச் செயலாளராகத் திண்டுக்கல் ஐ.லியோனியை கட்சித் தலைமை அண்மையில் அறிவித்தது. இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் திண்டுக்கல் நகரம் முழுவதும் லியோனியின் சார்பில் போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது. அதில் முன்னாள் முதல்வர் கருணாநிதி, கட்சித் தலைவர் ஸ்டாலின், பொதுச் செயலாளர் துரைமுருகன், இளைஞரணித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் படத்துடன் லியோனி படமும் இடம்பெற்றிருந்தது.

நகர் முழுவதும் இன்று காலை போஸ்டர் ஒட்டி முடிக்கப்பட்ட நிலையில் திமுகவினர் சிலர், போஸ்டரின் ஒரு பகுதியை மட்டும் கிழிக்கத் தொடங்கினர். லியோனி படம், அவரது பெயர் இருந்த பகுதி மட்டும் கிழிக்கப்பட்டது.

இதுகுறித்துப் போஸ்டர்களைக் கிழித்த திமுகவினர் கூறுகையில், ''திண்டுக்கல்லில் துணைப் பொதுச்செயலாளர் ஐ.பெரியசாமி படம் இடம்பெறாமல் எப்படி போஸ்டர் ஒட்டினார்? கொள்ளை பரப்புச் செயலாளர் பதவி என்ன துணைப் பொதுச்செயலாளருக்கு மேல் உள்ள பதவியா, ஐ.பி.யார் படம் இல்லாமல் போஸ்டர் ஒட்டியதற்கு எதிர்ப்புத் தெரிவித்துக் கிழித்தோம்'' என்றனர்.

திமுகவினர் எதிர்ப்பை அடுத்துப் புதிதாக துணைப் பொதுச்செயலாளர் ஐ.பெரியசாமி பெயர், படத்துடன் போஸ்டர் அடிக்க லியோனி தரப்பில் ஏற்பாடுகள் செய்து வருவதாகத் தெரிகிறது.

SCROLL FOR NEXT