அத்திக்கடவு - அவிநாசி பாசனம், நிலத்தடி நீர் செறிவு மற்றும் குடிநீர் வழங்கும் திட்டமானது ஈரோடு காளிங்கராயன் அணைக்கட்டு கீழே 200 மீட்டருக்கு அப்பால், பவானி ஆற்றிலிருந்து தண்ணீர் எடுத்து ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்டங்களில் வறட்சி பகுதிகளிலுள்ள 1044 குளம், குட்டைகளுக்கு முதற்கட்டமாக நீர் நிரப்பும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. ரூ.1652 கோடி மதிப்பில் நிறைவேற்றப்படும் இத்திட்டத்துக்காக, 6 இடங்களில் மிகப்பெரும் நீர் உந்து நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
தற்போது 3 மாவட்டங்களிலும் நீர் நிலைகளை இணைக்கும் வகையில், குழாய் பதிக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. மொத்தமாக 1058 கி.மீ. தூரத்துக்கு குழாய் பதிக்கப்படுகிறது. இதில் பிரதான குழாய் 105 கி.மீ. தூரத்துக்கும், கிளை குழாய் 953 கி.மீ. தூரத்துக்கும் பதிக்கப்படுகின்றன. குழாய் பதிக்கும் பணி, புறநகர் மற்றும் கிராமப்புறங்களில் உள்ள பிரதான சாலையோரங்களில் நடைபெறுகிறது. நீண்ட கால தொலைநோக்கு திட்டம் என்பதால், நகரப் பகுதிகளில் பல இடங்களில் பிரதான சாலைகளின் ஓரமாக மண் தடங்களில் செல்லும் பிற குடிநீர் திட்ட குழாய்களை பாதிக்காத வகையில், தார் சாலைகளின் மேற்பரப்பின்பக்கவாட்டு பகுதிகளில் குழி தோண்டி ராட்சத குழாய்கள் பதிக்கப்பட்டு வருகின்றன. இப்பணியால், பிரதான சாலைகள் மிகவும் சேதமடைந்து காணப்படுகின்றன.
குழாய்கள் பதிக்கப்பட்டவுடன் பள்ளங்கள் மூடப்பட்டாலும், வாகனங்கள் செல்ல முடியாத அளவில் மேடு, பள்ளங்களாக இருக்கின்றன. இதனால், போக்குவரத்துக்கான சாலைகளின் அகலம் குறைந்து நெரிசல் ஏற்படுவதுடன், அடிக்கடி விபத்துகளும் நிகழ்கின்றன. உதாரணமாக, அவிநாசியில் குழாய் பதிக்கும் பணிக்காக பள்ளம் தோண்டப்பட்ட கோவை - சேலம்பழைய தேசிய நெடுஞ்சாலையானது, தற்போது ஒரு வாகனம் மட்டும் செல்லும் வகையில் வண்டித்தடமாக மாறியுள்ளது.
இதுகுறித்து அவிநாசியை சேர்ந்த வழக்கறிஞரும், தன்னார்வலருமான நந்தகுமார் ‘இந்து தமிழ்' செய்தியாளரிடம் கூறும்போது, "நகருக்குள் கனரக வாகனங்கள் வராத வகையில் புறவழிச்சாலை இருந்தாலும், உதகை, மேட்டுப்பாளையத்தில் இருந்து திருப்பூர், ஈரோடு, சேலம் மற்றும் மத்திய, தென் மாவட்டங்களுக்கு செல்லும் வாகனங்கள், மைசூரு, சத்தியமங்கலம் மார்க்கத்திலிருந்து திருப்பூர் நோக்கி வரும் அனைத்துவாகனங்களும் அவிநாசி நகருக்குள் வந்து செல்கின்றன.
இதனால், பழைய தேசிய நெடுஞ்சாலையில் எப்போதும் போக்குவரத்து நெரிசல் இருக்கும். எனவே, குழாய் பதிக்க தோண்டப்பட்ட இடங்களில் சாலைகளை விரைந்துசீரமைக்கவும், மக்கள் அச்சமின்றி சென்று வரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.
மாநில நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளிடம் (திருப்பூர் மாவட்டம்) கேட்டபோது, "குழாய்களை பதித்த பிறகு, சாலைகளை சீரமைக்க அரசு நிர்ணயித்த கட்டணத் தொகையை அத்திக்கடவு - அவிநாசி திட்ட அதிகாரிகள் செலுத்தி வருகின்றனர். நிதியை செலுத்தியவுடன், எங்களது தலைமையிடம் ஒப்புதல் பெற்ற பிறகே நிதியை பெற்று பணிகளை மேற்கொள்ள முடியும். நிதியை பெற ஆவண தயாரிப்பு, நிதி கோரும் பணிகள் நடைபெற்று வருகின்றன. குழாய் பதிக்கும் பணியால் சேதமடைந்த சாலைகள் விரைவில் சீரமைக்கப்படவுள்ளன" என்றனர்.