கோவை சிறைத் துறை தயாரித்த,ஒருமுறை மட்டும் பயன்படுத்தக் கூடிய 1.24 லட்சம் முகக் கவசங்கள் தேக்கம் அடைந்துள்ளதால் தயாரிப்பு பணி நிறுத்தப்பட்டுள்ளது.
கரோனா வைரஸ் தொற்று பரவலைத் தடுக்க முகக் கவசம் கட்டாயம் என அரசு அறிவித்துள்ளதால், பெரிய நூற்பாலைகள் முதல் சிறியவியாபாரிகள் வரை முகக் கவசங் களை தயாரித்து விற்பனை செய்துவருகின்றனர். தமிழகத்தில் கோவைஉள்ளிட்ட சில மத்திய சிறைகளில் முகக் கவசங்கள் தயாரிக்கும் பணிகடந்த மார்ச் இறுதியில் தொடங்கப் பட்டது.
கோவை சிறையில் உள்ள தொழில் கூடத்தில், 20 தண்டனைக் கைதிகள் மூலம் தினசரி 2 ஆயிரம் எண்ணிக்கையில், ஒருமுறைமட்டும் பயன்படுத்தும் வகையில் இந்த முகக் கவசங்கள் தயாரிக்கப் பட்டன. முகக் கவசம் ஒன்றுக்கு ரூ.5 என விலை நிர்ணயம் செய்யப் பட்டு, சிறை பஜாரில் விற்பனை செய்யப்பட்டது.
ஏறத்தாழ 4 மாதங்களில் மொத்தம் 4.50 லட்சம் அளவுக்கு முகக் கவசங்கள் தயாரிக்கப்பட்டன. ஆனால், விற்பனை செய்ய அரசுத் துறைகளின் ஒத்துழைப்பு இல்லாததால் சிறைத் துறை நிர்வாகத்தினர் தயாரித்த முகக் கவசங்கள் ஒரு லட்சத்துக்கும் மேல் தேங்கின. இதையடுத்து தயாரிப்பு நிறுத்தப்பட்டது.
தொடர்ந்து சில வருடங்கள் முகக் கவசங்களை பயன்படுத்த வேண்டும் என்பதால்,மக்கள் ஒருமுறை பயன்படுத்தும் முகக் கவசங்களை வாங்குவதற்கு பதில், துவைத்து பயன்படுத்தக் கூடிய துணியினால் ஆன முகக் கவசங்களை வாங்கி பயன்படுத்தத் தொடங்கினர்.
இதுதொடர்பாக கோவை சரக சிறைத் துறை டிஐஜி சண்முக சுந்தரம் கூறும்போது,‘‘கோவை மத்தியசிறையில் முகக் கவசம் தயாரிக்கும் பணி நிறுத்தப்பட்டு சில வாரங்கள் ஆகின்றன. உயர் அதிகாரிகளின் அனுமதி பெற்று, துணியினால் தயாரிக்கப்பட்ட, மீண்டும் பயன்படுத்தக்கூடிய முகக் கவசங்களை தயாரிக்கவும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது’’ என்றார்.
மத்தியசிறைக் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் கூறும்போது, ‘‘சிறை பஜாரில் தினசரி 100 முகக் கவசங்கள் விற்பனையாகின்றன. தற்போது 1.24 லட்சம் முகக் கவசங்கள் கையிருப்பில் உள்ளன. அவற்றை விற்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது’’ என்றார்.