தமிழகம்

ராகுல்காந்தி கைது செய்யப்பட்டதை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட கே.எஸ்.அழகிரி, ஜோதிமணி கைது

செய்திப்பிரிவு

ராகுல் காந்தி கைது செய்யப்பட்டதைக் கண்டித்து தமிழகத்தில் பல்வேறு இடங்களில் காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியல் மற்றும் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

உத்தர பிரதேசத்தில் கொல்லப்பட்ட பட்டியலின இளம்பெண்ணின் குடும்பத்தினரை சந்திக்கச் சென்ற ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதைக் கண்டித்து தமிழக காங்கிரஸ் கட்சியினர் பல்வேறு இடங்களில் சாலை மறியல் மற்றும் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

சென்னை சத்தியமூர்த்தி பவனில் மாலையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தை அடுத்து தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி, பிரின்ஸ் எம்எல்ஏ உள்ளிட்ட ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர்.

கரூரில் பேருந்து நிலைய ரவுண்டானாவில் எம்.பி. ஜோதிமணி தலைமையில் மாவட்ட தலைவர் ஆர்.சின்னசாமி உள்ளிட்ட காங்கிரஸார் உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் உருவபொம்மையை எரித்து, நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பேருந்து நிலைய ரவுண்டானா, கோவை சாலை, பழைய புறவழிச்சாலை உள்ளிட்ட சாலைகளில் ஏராளமான பேருந்துகள் நீண்ட தூரம் நின்றன.

இதையடுத்து, போலீஸார் ஜோதிமணி, சின்னசாமி, 7 பெண்கள் உள்ளிட்ட 13 பேரை கைது செய்தனர். இதேபோல, ராகுல் காந்தி கைது செய்யப்பட்டதை கண்டித்து, திருச்சியில் காங்கிரஸ் கட்சியின் மாவட்ட அலுவலகமான அருணாச்சலம் மன்றம் முன், கட்சியின் மாநகர் மாவட்டத் தலைவர் ஜவஹர் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்ட 2 பெண்கள் உட்பட 42 பேரை போலீஸார் கைது செய்தனர்.

தலைவர்கள் கடும் கண்டனம்

உத்தர பிரதேசத்தில் பட்டியலினத்தைச் சேர்ந்த இளம்பெண் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு தமிழக அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். அவர்கள் தெரிவித்துள்ளதாவது:

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்: இரக்கமற்ற கொடூர மனம் படைத்தவர்கள் இந்த நாட்டில் வாழ்கின்றனர் என்பதற்கு எடுத்துக்காட்டுதான் உ.பி.யில் அடுத்தடுத்து நடந்திருக்கும் கூட்டுப் பாலியல் வன்முறைக் கொடுமைகள். பெண்களது இயல்பான வாழ்க்கைக்கு பாதுகாப்பு இல்லாத மாநிலமாக உ.பி. இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன. பாதிக்கப்பட்ட பெண்ணின் வீட்டுக்கு ஆறுதல் சொல்லச் சென்ற ராகுல்காந்தியும், பிரியங்காவும் போலீஸாரால் தடுக்கப்பட்டுள்ளனர். இது மிகவும் கண்டிக்கத்தக்கது. மனித உரிமைகள், ஜனநாயக நெறிகளுக்கு எதிரானது. இதற்கு உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.

காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர்: உ.பி.யில் நடந்திருப்பது கண்டனத்துக்குரிய இழிசெயல். கொல்லப்பட்ட பெண்ணின் பெற்றோருக்கு ஆறுதல் கூறச் சென்ற ராகுல் காந்தியையும், பிரியங்கா காந்தியையும் காவல்துறையினர் தடுத்து நிறுத்தியது ஜனநாயக விரோதம். இந்த சம்பவங்கள் குறித்து விசாரிக்க நீதிபதி தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட வேண்டும்.

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், அகில இந்திய மகளிர் கலாச்சார சங்கம், அகில இந்திய ஜனநாயக மாணவர் சங்கம், அகில இந்திய ஜனநாயக இளைஞர் சங்கம் ஆகியவற்றின் செயலாளர்கள், இந்திய தவ்ஹீத் ஜமாஅத் துணைப்பொதுச்செயலாளர் முஹம்மது ஷிப்லி உள்ளிட்டோரும் இளம்பெண் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT