கோப்புப் படம் 
தமிழகம்

தீவிரவாத இயக்கங்கள் தாக்குதல் நடத்த திட்டம்; தமிழகத்தில் முக்கிய பிரமுகர்களின் பாதுகாப்பை அதிகரிக்க உத்தரவு: மாநில எல்லைகளில் தீவிர வாகன சோதனை

செய்திப்பிரிவு

தமிழகம் முழுவதும் முக்கிய பிரமுகர்களின் பாதுகாப்பை பலப்படுத்துமாறு காவல் துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

இந்தியாவில் தாக்குதல் நடத்த தீவிரவாத இயக்கங்கள் திட்டம் போட்டிருப்பதாகவும் குறிப்பாக பாஜக, ஆர்எஸ்எஸ், விஎச்பி, ஏபிவிபி மற்றும் இந்துஅமைப்புகளின் தலைவர்களைகொலை செய்ய திட்டம் போட்டிருப்பதாகவும் மத்திய உளவுத்துறை கடந்த ஆகஸ்ட் மாதம் 16-ம் தேதி எச்சரிக்கை விடுத் திருந்தது.

இதற்கிடையே நீதிமன்ற தீர்ப்புகளால் அதிருப்தி அடைந்தவர்கள் முக்கிய அரசியல் கட்சிதலைவர்களை குறிப்பாக பாஜக, ஆர்எஸ்எஸ், விஎச்பி,ஏபிவிபி போன்ற அமைப்புகளைச் சேர்ந்தவர்களை கொல்ல திட்டம் போட்டிருப்பதாக அனைத்து மாநிலங்களையும் உளவுத் துறை மீண்டும் எச்சரித்துள்ளது.

விமான, ரயில் நிலையங்கள்

இதைத்தொடர்ந்து தமிழகம்முழுவதும் முக்கியப் பிரமுகர்களுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழகம் முழுவதும் பாஜக, ஆர்எஸ்எஸ், விஎச்பி, ஏபிவிபி போன்ற இந்து அமைப்புகளின் தலைவர்களுக்கு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. சென்னை உட்பட அனைத்து விமான நிலையங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளன. முக்கிய ரயில் நிலையங்களில் மெட்டல் டிடெக்டர் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு சோதனை தொடர்ந்து நடத்தப்படுகிறது.

மாநில எல்லைகளில் தமிழகபோலீஸார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். விடுதிகளில் தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது. சந்தேகநபர்கள் குறித்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு உடனடி தகவல் கொடுக்கும்படி போலீஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

நேற்று நடத்தப்பட்ட சோதனையில் தமிழகம் முழுவதும் 26 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து காவல்துறை அதிகாரிகள் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

அனைத்து விமான நிலையங்கள், முக்கிய ரயில் நிலையங்களில் மெட்டல் டிடெக்டர் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு சோதனை தொடர்ந்து நடத்தப்படுகிறது.

SCROLL FOR NEXT