காவிரி நீரைப் பெறுவதற்கு அனைத்து கட்சிகளையும் ஒருங்கிணைத்து மத்திய அரசுக்கு நிர்ப்பந்தம் கொடுக்க வேண்டும் என்று சிபிஐ மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் யோசனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், ''காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின்படி கடந்த மாதம் வரை தர வேண்டிய நீரில் 28 டிஎம்சியை கர்நாடக அரசு தராமல் உள்ளது. ஏற்கெனவே குறுவை சாகுபடி பொய்த்துப்போன நிலையில், சம்பா சாகுபடிக்கு கடைமடை வரை தண்ணீர் செல்லவில்லை.
கர்நாடகத்தில் காவிரியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள 4 அணைகளிலும் அளவுக்கு அதிகமாக தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது. அது நடுவர் மன்ற தீர்ப்புக்கு எதிரானது. கர்நாடக அரசுக்கு மத்திய அரசு துணை நிற்கிறது.
எனவே, காவிரி நீரை பெறுவதற்கு தமிழகத்தில் அரசியல் கட்சிகளை எல்லாம் ஒருங்கிணைத்து மத்திய அரசுக்கு தமிழக அரசு நிர்ப்பந்தம் கொடுக்க வேண்டும்'' என்று முத்தரசன் கூறியுள்ளார்.