பிளஸ்-2 தேர்வு முடிவு இன்று வெளியிடப்படுகிறது. இந்நிலையில், தேர்வில் தோல்வி, எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்காமை உள்ளிட்ட காரணங்களால் மன அழுத் தத்துக்கு உள்ளாகும் மாணவ-மாணவிகளுக்கு சென்னையைச் சேர்ந்த ‘சினேகா’ தொண்டு நிறுவனம் உளவியல் ஆலோசனை வழங்குகிறது.
மன உளைச்சலால் தவிக்கும் மாணவர்களுக்கு ஆலோசனை அளிப்பதற்காக 24 மணி நேரமும் இயங்கும் பிரத்யேக ஹெல்ப்லைன் வசதியை (044-24640050) இந்த ஆண்டு சினேகா தொண்டு நிறுவனம் ஏற்படுத்தியுள்ளது. இன்று (வெள்ளிக்கிழமை) முதல் 20-ம் தேதி வரை இந்த வசதி செயல்படும். ஏற்கெனவே தினமும் இயங்கும் மற்றொரு ஹெல்ப்லைன் எண்ணும் (044-24640060) வழக்கம்போல் செயல்படும்.
மேலும், சென்னை ஆர்.ஏ.புரம் பார்க் வியூ சாலையில் (எண் 11) அமைந்துள்ள சினேகா அலுவலகத்துக்கு தினமும் காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை நேரில் சென்றும் ஆலோசனை பெறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், 108 ஆம்புலன்ஸ் நிறுவனத்தின் சிறப்பு ஹெல்ப்லைன் எண்ணை (104) தொடர்புகொண்டும் மாணவ-மாணவிகள் உளவியல் ஆலோசனைகள் பெற்று பயன்பெறலாம்.
கவலை வேண்டாம்
எஸ்எஸ்எல்சி, பிளஸ்-2 பொதுத்தேர்வுகளில் வெற்றிவாய்ப்பை இழந்தால் மாணவர்களின் ஓராண்டு படிப்புக்காலம் வீண் ஆனதெல்லாம் சமீப காலமாக மாறிவிட்டது, தேர்வில் தோல்வி அடையும் மாணவர்களின் படிப்பு காலம் வீணாவதை தடுக்கும் வகையில் அடுத்த சில மாதங்களிலேயே அவர்களுக்கு சிறப்புத் துணைத்தேர்வு நடத்தப்படுகிறது. இதில் வெற்றிபெற்று அதே கல்வி ஆண்டிலேயே மாணவர்கள் தங்கள் மேற்படிப்பைத் தொடரலாம்.
எனவே, தேர்வில் தோல்வி அடைந்துவிட்டோமே என்று எந்த மாணவரோ, மாணவியோ கவலைப்பட தேவையில்லை. இத்தகைய மாணவர்களை திட்டி அவர்களை மேலும் வேதனைப்படுத்தாமல் பெற்றோர் தைரியமூட்டி ஆறுதல் சொல்ல வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக, தோல்வி அடைந்த மாணவ-மாணவிகளை குறைந்தபட்சம் 2 நாட்களாவது தனிமையில் இல்லாமல் பார்த்துக்கொள்வது நல்லது.