முதல்வர், துணை முதல்வர் ஆகியோரை அமைச்சர்கள் சந்திப்பது என்பது சகஜமான நிகழ்வு என்று சுற்றுலாத் துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் கூறியுள்ளார்.
புத்தூரில் உள்ள திருச்சி நகர கூட்டுறவு வங்கி வளாகத்தில் இன்று (அக். 1) நடைபெற்ற கூட்டுறவு வங்கி புதிய வளைவு திறப்பு விழா, நகரும் நியாயவிலைக் கடை தொடக்க விழா, சிறுபான்மையினருக்கான டாம்கோ கடன் வழங்கும் விழா ஆகியவற்றில் கலந்துகொண்ட அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் செய்தியாளர்களிடம் கூறுகையில், "அதிமுகவில் மட்டுமே சாதாரணத் தொண்டனும் முதல்வராக, அமைச்சராக உயர்ந்த பதவிக்கு வர முடியும்.
முதல்வர் வேட்பாளர் குறித்து அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியது அவரது சொந்தக் கருத்து. எங்களைப் பொறுத்தவரை கட்சித் தலைமை எடுக்கும் முடிவுக்குக் கட்டுப்பட்டுச் செயல்படுவோம். கட்சித் தலைமை நல்ல முடிவை எடுக்கும். அதிமுகவில் தலைமை எடுக்கும் முடிவுக்குக் கட்டுப்படும் தொண்டர்கள் ஒன்றரை கோடி பேர் உள்ளனர்" என்றார்.
சசிகலாவின் விடுதலைக்குக் காத்திருப்பதாலேயே முதல்வர் வேட்பாளர் யார் என்பதை அறிவிக்காமல் தாமதிப்பதாகக் கூறப்படுவது குறித்த கேள்விக்கு, "அது உங்களது கற்பனை. அதற்குப் பதில் கூற முடியாது" என்றும், சசிகலாவுக்கு எந்தக் காலத்திலும் அதிமுகவில் இடமில்லை என்று கூறப்படுவதற்கு, "தலைமை என்ன முடிவு எடுக்கிறதோ அதற்குக் கட்டுப்படுவோம்" என்றும் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் பதில் அளித்தார்.
அதிமுக செயற்குழுக் கூட்டத்தில் கடும் வாக்குவாதம் நடைபெற்றதாகக் கூறப்படுவது குறித்த கேள்விக்கு, "சபையில் வாதப் பிரதிவாதங்கள் நடைபெறுவது இயற்கை. முதல்வர் வேட்பாளரை அக்.7-ம் தேதி அறிவிப்பது என்பது கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் அனைவரும் ஒரு சேர எடுத்த முடிவு" என்றார்.
முதல்வர், துணை முதல்வர் ஆகியோரை அமைச்சர்கள் சென்று சந்திப்பது குறித்த கேள்விக்கு, "முதல்வரை, துணை முதல்வரை, மூத்த அமைச்சர்களை நாங்கள் சென்று சந்திப்பதும், அவர்கள் எங்களுடன் பேசுவதும் சகஜம். எங்களுக்குத் தெரியாத விஷயங்களை நாங்கள் மூத்த அமைச்சர்களிடமும், மூத்த அமைச்சர்கள் முதல்வர், துணை முதல்வரிடமும் கேட்பார்கள். எனவே, சந்திப்பு குறித்து எதுவும் கூறுவதற்கில்லை" என்று அமைச்சர் நடராஜன் பதில் அளித்தார்.
செய்தியாளர் சந்திப்பின்போது மாநில பிற்படுத்தப்பட்டோர்- சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சர் எஸ்.வளர்மதி, ஆவின் தலைவர் சி.கார்த்திகேயன் ஆகியோர் உடனிருந்தனர்.