தமிழகம்

தாமிரபரணியில் கழிவுநீர் கலப்பதைத் தடுக்க சிறப்பு ஏற்பாடு: கரைகளில் தொட்டிகள் அமைக்கப்படுகிறது

அ.அருள்தாசன்

திருநெல்வேலி மாநகராட்சியை தாமிரபரணி கடந்து செல்லும் பகுதிகளில் கழிவுகள் மற்றும் கழிவுநீர் கலப்பதைத் தடுக்க கரைகளில் தற்காலிகமாக தொட்டிகள் அமைக்கப்படுகிறது. இப்பணிகளை மாநகராட்சி ஆணையர் கண்ணன் ஆய்வு செய்தார்.

திருநெல்வேலி மாநகராட்சிப் பகுதியில் குடியிருப்புகள், உணவகங்கள் உள்ளிட்ட கடைகளில் இருந்து கழிவுநீர் வெளியேறி தாமிரபரணியில் கலக்கும் பிரச்சினை தீர்வின்றி தொடர்கிறது.

மாநகரில் 3 கட்டங்களாக பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இத் திட்டம் இன்னும் முழுமையாக நிறைவேறவில்லை என்பதால் சாக்கடைகளும், கழிவு நீரும் கால்வாய்கள் வழியாக தாமிரபரணி கரைக்கு சென்று சேருகிறது.

குறிப்பாக கொக்கிரகுளம், கைலாசபுரம், கருப்பந்துறை, வண்ணார்பேட்டை பகுதிகளில் தாமிரபரணி ஆற்றில் சாக்கடை கலப்பது குறித்து மாநகராட்சி புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.

இதையடுத்து இந்த பிரச்சினைக்கு தற்காலிக தீர்வாக தாமிரபரணி கரைகளில் கழிவுநீர் தொட்டி அமைத்து, அவற்றில் ஜல்லி கற்களை நிரப்பும் திட்டத்தை செயல்படுத்த மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்து பணிகள் தொடங்கப்பட்டிருக்கின்றன.

அவ்வாறு அமைக்கப்படும் கழிவுநீர் தொட்டிகளுக்குள் சேகரமாகும் கழிவுநீர் ஆற்றின் கரைகளில் வளர்க்கப்படும் செடிகளுக்கு சென்று சேரும் வகையில் கட்டமைப்புகள் உருவாக்கப்படுகின்றன. கொக்கிரகுளத்தில் இத் திட்ட செயல்பாட்டை மாநகராட்சி ஆணையர் கண்ணன் ஆய்வு செய்தார்.

கழிவு நீரில் பிளாஸ்டிக் கழிவுகள் அதிகளவில் சேருவதால் கழிவுநீர் தொட்டிகளில் கழிவுநீர் வழிந்தோடிவரும் பகுதியில் இரும்பு கம்பிகளால் ஜல்லடை அமைக்க அதிகாரிகளுக்கு ஆணையர் அறிவுறுத்தினர்.

இந்த ஆய்வு பணியின்போது மாநகராட்சி செயற்பொறியாளர் பாஸ்கர், உதவி பொறியாளர் பைஜு உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர். மாநகரில் பாதாள சாக்கடை திட்டம் முழுமையாக செயல்பாட்டுக்கு வரும்போதுதான் தாமிரபரணியில் கழிவுநீர் வந்து சேருவதை தடுக்க முடியும்.

அதற்குமுன் மாற்று ஏற்பாடாக கழிவுநீர் தொட்டிகளில் கழிவுநீரை சேகரித்து பயனுள்ள வகையில் பயன்படுத்தும் திட்டத்தை மாநகராட்சி செயல்படுத்தியிருக்கிறது.

..

SCROLL FOR NEXT