கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு நேற்று உயிரிழந்த இந்து முன்னணி நிறுவனர் ராம கோபாலன் (94) உடல், திருச்சி சீராத்தோப்பில் உள்ள பாரத பண்பாட்டு பயிற்சிக் கல்லூரி வளாகத்தில் இன்று அடக்கம் செய்யப்பட்டது.
மூச்சுத் திணறல் காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ராம கோபாலனுக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்தநிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று (செப். 30) அவர் மருத்துவமனையிலேயே உயிரிழந்தார்.
இதையடுத்து, கரோனா பரவல் தடுப்பு நடைமுறைகளைப் பின்பற்றி, அவரது உடல் பாதுகாப்பாக சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள இந்து முன்னணி அலுவலகத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
தொடர்ந்து, இன்று (அக். 1) காலை திருச்சிக்குக் கொண்டு வரப்பட்டு, குழுமணி சாலையில் உள்ள பாரத பண்பாட்டு பயிற்சிக் கல்லூரி வளாகத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம், பாஜக முன்னாள் தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா மற்றும் இந்து முன்னணி உட்பட பல்வேறு இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், பாஜகவினர் ராம கோபாலன் உருவப் படத்துக்கு அஞ்சலி செலுத்தினர்.
தொடர்ந்து, கோவை காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமிகளின் தலைமையில், ஆகம விதிகளின்படி ராம கோபாலனின் இறுதிச் சடங்கு நடைபெற்றது. பிற்பகல் 12.50 மணியளவில் ராம கோபாலனின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. ராம கோபாலனின் உதவியாளர் கே.பத்மராஜன், காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் ஆகியோர் ராம கோபாலனுக்கு இறுதிச் சடங்குகளைச் செய்தனர்.
மத்திய மண்டல காவல் துறைத் தலைவர் ஹெச்.எம்.ஜெயராம், திருச்சி சரக காவல் துறை துணைத் தலைவர் இசட்.ஆனிவிஜயா, திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டி.ஜெயச்சந்திரன் ஆகியோர் தலைமையில் உறையூர் முதல் சீராத்தோப்பு வரை நேற்று முதலே ஏராளமான காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
அஞ்சலி செலுத்திய பிறகு செய்தியாளர்களிடம் பொன்.ராதாகிருஷ்ணன் கூறுகையிகல், "இந்து சமுதாயத்துக்கு உழைப்பதற்காகவே தனது அரசுப் பணியை ராஜினாமா செய்துவிட்டு ஆர்எஸ்எஸ் அமைப்பில் தன்னை இணைத்துக் கொண்டவர் ராம கோபாலன். 1980-ல் இந்து முன்னணியைத் தொடங்கி, தனது இறுதிமூச்சு வரை இந்துக்களுக்காக தன்னையே அர்ப்பணித்தவர். அவரிடம் ஒன்றரை ஆண்டுகள் நான் உதவியாளராக இருந்தபோது, என்னை முழு மனிதனாக மாற்றியவர். அவரது மறைவு இந்து முன்னணி, பாஜக உள்ளிட்ட இயக்கங்களுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு" என்றார்.
ஹெச்.ராஜா கூறுகையில், "தமிழ்நாட்டில் இந்துக்களை ஒருங்கிணைத்து இந்து எழுச்சியை உருவாக்கியவர் ராம கோபாலன். தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருந்தும் அதைப் பொருட்படுத்தாமல் இந்துக்களுக்காக பணியாற்றியவர். இந்து சமுதாயத்தைக் காப்பாற்ற நம்மை அர்ப்பணித்துக் கொள்வதே அவருக்கு நாம் செலுத்தும் அஞ்சலி" என்றார்.