கொள்ளை நடந்த வீடு 
தமிழகம்

தி.நகரில் 250 சவரன் நகை, பணம் கொள்ளை: வீட்டில் உள்ளவர்களைக் கட்டிப்போட்டு காரையும் திருடிச் சென்ற கொள்ளையர்கள்

செய்திப்பிரிவு

தி.நகரில் கரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்துதலில் இருந்தவரின் வீட்டில் தங்கியிருந்த உறவினரின் உதவியுடன் புகுந்த நபர்கள் 250 சவரன் தங்க நகைகளைக் கொள்ளையடித்து, காரையும் திருடிச் சென்றனர். இதில் சந்தேக நபரைப் பிடித்துவந்த போலீஸார் அவருக்குக் கரோனா தொற்று இருப்பதை அறிந்து அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

சென்னையில் சமீபகாலமாக வீடு புகுந்து திருடுவது, வழிப்பறி ஆகியவை அதிகரித்து வருகின்றன. சென்னை தி.நகரில் நேற்று பெரிய அளவில் ஒரு கொள்ளைச் சம்பவம் நடந்துள்ளது. சென்னை தி.நகர் பாண்டிபஜார் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சாரதாம்பாள் தெருவில் வசிப்பவர் நூருல் ஹக் (71). துபாயில் வசித்து வந்த இவர் பிரபல தனியார் கட்டுமானத் தொழில் நிறுவனத்தில் நிர்வாக இயக்குனராகப் பணியாற்றினார்.

நூருல் ஹக் தன் குடும்பத்துடன் தி.நகர் சாரதாம்பாள் தெருவில் வசித்து வருகிறார். இவர் குடும்பத்தினருக்குக் கரோனா தொற்று ஏற்பட்டதால் அவர்கள் தனிமைப்படுத்துதலில் இருந்து வருகின்றனர். இவர்கள் பயன்பாட்டுக்காக ஒரு ஹோண்டா சிட்டி காரையும், ஒரு ஆட்டோவையும் வைத்துள்ளனர். வாகன ஓட்டுநராக அப்பாஸ் என்பவர் வீட்டிலேயே தங்கியுள்ளார். சமீபத்தில் நூருல் ஹக்கின் உறவினர் முஸ்தபா மூலம் காயல்பட்டினத்தில் வசிக்கும் மனைவியின் அக்காள் பேரன் மொய்தீன் (29) சென்னை வந்துள்ளார். அவரும் நூருல் ஹக்கின் வீட்டில் தங்கியுள்ளார்.

நூருல் ஹக் வீட்டில் உள்ள பணம், நகைகள் உள்ளிட்டவற்றைப் பார்த்து மொய்தீனுக்கு ஆசை வந்துள்ளது. அவர் மனதில் இவற்றைக் கொள்ளை அடித்தால் வசதியாக வாழலாம் என்கிற எண்ணம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் கூட்டாளிகளுக்குத் தகவல் கொடுத்துக் கொள்ளையடிக்கத் திட்டம் தீட்டியுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் வீட்டில் உள்ள பலருக்கும் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மொய்தீனுக்கும் கரோனா தொற்று இருந்துள்ளது. இதனால் அனைவரும் தனிமைப்படுத்துதலில் இருந்துள்ளனர்.

முஸ்தபா உள்ளிட்ட சிலருக்கு மட்டும் கரோனா தொற்று இல்லை. அவரும் கரோனா பரிசோதனை செய்துள்ளார். இந்நிலையில் நேற்று மாலை 4.45 மணி அளவில் நூருல் ஹக் வீட்டிற்கு 8 பேருக்கும் மேற்பட்ட கும்பல் கத்தி, அரிவாளுடன் வீட்டுக்குள் புகுந்துள்ளது. முதலில் ஓட்டுநர் அப்பாஸை மிரட்டிக் கட்டிப்போட்ட கும்பல், வீட்டிலுள்ள அனைவரையும் கட்டிப்போட்டு வீட்டில் உள்ள நகை, விலை உயர்ந்த வாட்ச் உள்ளிட்டவற்றை சாவகாசமாகக் கொள்ளை அடித்துள்ளது.

சுமார் இரண்டரை மணி நேரத்திற்கும் மேலாக அங்கிருந்த கும்பல் வீட்டிலிருந்த 250 சவரன் தங்க நகைகள், 60 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள வாட்ச், 90 ஆயிரம் பணம் உள்ளிட்டவற்றைக் கொள்ளையடித்துவிட்டு வெளியில் செல்லும்போது அவர்களின் விலை உயர்ந்த ஹோண்டா சிட்டி காரில் ஏறித் தப்பியுள்ளது.

ஆட்கள் அதிகம் இருந்ததால் காரில் இடமில்லை என்று யோசித்த கும்பல் ஆட்டோவையும் எடுத்துக்கொண்டு உறவினர் முஸ்தபாவை ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு தப்பியுள்ளது.

பின்னர் அங்கிருந்து 2 கிலோ மீட்டர் தொலைவுக்குச் சென்றபின் முஸ்தபாவை ஜி.என்.செட்டி சாலையில் இறக்கிவிட்டுவிட்டு ஆட்டோவையும் விட்டுவிட்டு அந்தக் கும்பல் தப்பிச் சென்றுள்ளது. ஆட்டோவுடன் வீட்டுக்குத் திரும்பிய முஸ்தபா, கரோனா தொற்று பாதிக்காத முஸ்தபாவின் தந்தை, உறவினர் தானிஷ் ஆகியோர் பாண்டிபஜார் காவல் நிலையத்துக்குச் சென்று புகார் கொடுத்துள்ளனர்.

அங்கு வந்த பாண்டிபஜார் போலீஸார் போதிய சமூக இடைவெளி, பாதுகாப்பு நடைமுறையுடன் விசாரணை நடத்தி கைரேகை நிபுணர்கள், தடயவியல் நிபுணர்களுடன் தடயங்களைச் சேகரித்துள்ளனர். பின்னர் சந்தேகத்தின் பேரில் விசாரணைக்காக ஆட்டோவில் உடன் சென்று திரும்பிய முஸ்தபாவை ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தியுள்ளனர்.

இந்நிலையில் முஸ்தபா கரோனா பரிசோதனைக்காக கொடுத்த மாதிரியில் அவருக்கு கோவிட் தொற்று இருப்பது உறுதியானதால் சுகாதாரத்துறை அதிகாரிகள் முஸ்தபாவைத் தேடி வந்துள்ளனர். அங்கு நடந்த சம்பவத்தைக் கேள்விப்பட்டு உடனடியாக ஸ்டேஷனுக்குச் சென்று முஸ்தபாவுக்குக் கரோனா பாதிப்பு இருக்கும் தகவலைத் தெரிவித்துள்ளனர்.

இதனால் அதிர்ந்துபோன போலீஸார் முஸ்தபாவை விடுவித்து வீட்டுக்கு அனுப்பி அங்கு தனிமையில் இருக்கச் சொல்லியுள்ளனர். அதே நேரம் கரோனா தொற்று ஏற்பட்டவரை ஸ்டேஷனுக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தியதால் அடுத்து என்ன பாதுகாப்பு வழிமுறைகள் செய்யலாம், யார் யார் தனிமைப்படுத்துதலில் இருக்க வேண்டும், சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என யோசித்து வருகின்றனர்.

தப்பி ஓடிய மொய்தீனுக்கும் கரோனா தொற்று இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் கொள்ளையில் சம்பந்தப்பட்ட மற்றவர்களுக்கும் பரவ வாய்ப்புள்ளதால் போலீஸார் துரிதமாக விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். சம்பந்தப்பட்ட இடத்தில் இருக்கும் சிசிடிவி காட்சிகளையும் போலீஸார் சேகரித்துள்ளனர்.

SCROLL FOR NEXT