தமிழகம்

இன்றைக்கு வாய் திறப்பதாக இல்லை: முதல்வர் வேட்பாளர் சர்ச்சை குறித்த கேள்விக்கு திண்டுக்கல் சீனிவாசன் பதில்

பி.டி.ரவிச்சந்திரன்

அதிமுகவின் அடுத்த முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனி சாமிதான் என வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்தது சர்ச்சையாகிய நிலையில், இன்றைக்கு வாய் திறக்க மாட்டேன் எனக் கூறி சர்ச்சைக்கு அவரே முற்றுப்புள்ளியும் வைத்துள்ளார்.

முன்னதாக நேற்று அமைச்சர் அளித்த பேட்டியில், "அதிமுகவில் முதல்வர் வேட் பாளர் யார் என்ற போட்டியெல்லாம் இல்லை. நல்ல முறையில் ஆட்சி நடக்கிறது. மக்கள் பிரச்சினைகளைத் தீர்த்து வருகிறோம். சின்னப் பிரச்சினைகள் இருக்கும், அதையெல்லாம் பார்த்துக் கொள்வோம்.

அடுத்த ஆட்சி அதிமுக ஆட்சிதான். அடுத்த முதல்வர் பழனிசாமி தான். அக்டோபர் 7-ம் தேதி முறைப்படி முதல்வரும், துணை முதல்வரும் அறிவிப்பார்கள். முதல்வர் நடத்திய கூட்டத்தில் துணை முதல்வர் பங்கேற்காதது, அவரது வேலை யின் காரணமாகவே " என்று கூறியிருந்தார்.

இது கட்சிக்குள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. கண்டனங்களும் எழுப்பினர்.

இந்நிலையில் இன்று, அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ஒட்டன்சத்திரம் அருகே பெத்தேல் புரத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது அவரை செய்தியாளர்கள் சூழ்ந்து கொண்டு, எடப்பாடி பழனிச்சாமி தான் அடுத்த முதல்வர் என்று பேட்டியளித்ததற்கு அதிமுகவில் பலர் கண்டனம் தெரிவித்து வருவது குறித்து கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த அவர், "கட்சியின் கண்டனம் நியாயமானது. கட்சிக் கட்டுப்பாடும் சரியானதுதான். நான் மூத்த உறுப்பினர். கட்சிக்கு கட்டுப்பட்டு இருக்க வேண்டும். அதனால் இன்றைக்கு வாய் திறப்பதாக இல்லை" எனத் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT