ராணிப்பேட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இழந்த செல்போன்களை திரும்பப் பெற வந்திருந்த பொதுமக்கள். 
தமிழகம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 'சைபர் செல்' உதவியால் ரூ.6.50 லட்சம் மதிப்பிலான 50 செல்போன்கள் பொதுமக்களிடம் ஒப்படைப்பு

வ.செந்தில்குமார்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்த 3 மாதங்களில் மாயமான, திருடப்பட்ட ரூ.6.50 லட்சம் மதிப்பிலான 50 செல்போன்கள் மீட்கப்பட்டன. அவற்றை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் உரியவர்களிடம் ஒப்படைத்தார்.

வேலூர் மாவட்டத்தில் இருந்து கடந்த ஆண்டு புதிதாகப் பிரிக்கப்பட்ட ராணிப்பேட்டை மாவட்டத்தின் முதல் காவல் கண்காணிப்பாளராக மயில்வாகனன் நியமிக்கப்பட்டார். புதிய மாவட்டத்தில் காவல் துறைக்கான கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டு வரும் நிலையில், கடந்த ஜூன் மாதம் 3-ம் தேதி முதல் 'சைபர் செல்' பிரிவு இயங்கி வருகிறது. உதவி காவல் ஆய்வாளர் தலைமையில் 3 காவலர்களுடன் செயல்படும் இந்த மையம் சைபர் குற்றங்கள் தொடர்பான புகார்கள் மீது விசாரணை நடத்தி வருகிறது.

மாவட்டத்தில் கடந்த 3 மாதங்களில் காணாமல் போன, திருடப்பட்ட செல்போன்கள் குறித்த புகார்கள் தொடர்பாக 'சைபர் செல்' பிரிவு குழுவினர் தொடர்ந்து விசாரணை நடத்திவந்தனர். இதில், ரூ.6.50 லட்சம் மதிப்பிலான 50 செல்போன்களை மீட்டுள்ளனர். இதனை உரிய நபர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி ராணிப்பேட்டையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று (அக். 1) நடைபெற்றது.

இதில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் பங்கேற்று செல்போன்களை உரிய நபர்களிடம் ஒப்படைத்தார். அப்போது, ராணிப்பேட்டை உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் பூரணி, அரக்கோணம் உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் மனோகரன் ஆகியோர் உடனிருந்தனர்.

மீட்கப்பட்ட செல்போனை உரிய நபரிடம் ஒப்படைக்கும் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன்.

இது தொடர்பாக காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் கூறும்போது, "மாவட்ட சைபர் பிரிவு காவலர்கள் கண்காணிப்பில் சென்னை, ராணிப்பேட்டை மற்றும் அருகில் உள்ள மாவட்டங்களில் இருந்து இந்த செல்போன்களை மீட்டுள்ளனர். இதைப் பயன்படுத்திய நபர்களிடம் மற்றவர்களுக்குச் சொந்தமான செல்போன்களைப் பயன்படுத்தி வருகிறீர்கள் என்று கூறியதும் திரும்ப ஒப்படைத்தனர். மீட்கப்பட்ட செல்போன்களை உரியவர்களை வரவழைத்து ஒப்படைத்துள்ளோம்" என்று தெரிவித்தார்.

மாவட்ட சைபர் குற்றங்கள் தடுப்புப் பிரிவால் இழந்த செல்போன்களைத் திரும்பப் பெற்ற பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் காவல் துறையினருக்கு நன்றி தெரிவித்துச் சென்றனர்.

SCROLL FOR NEXT