பட்டாசுகளை ஏற்றுமதி செய்ய சரக்குக் கப்பல் கட்டணத்தைக் குறைக்க வேண்டும் என மாணிக்கம் தாகூர் எம்.பி மத்திய கப்பல் துறை அமைச்சர் மண்சுக் மாண்ட்வியாவை நேரில் சந்தித்து வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் அமைச்சரிடம் அளித்த கடித்ததில், "தமிழ்நாட்டில் சிவகாசி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பட்டாசு தயாரிக்கும் தொழிலில் ஏராளமனோரின் வாழ்வாதாரமாக விளங்குகிறது.
பட்டாசு தொழில்கள் மூலம் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட ஏழை மற்றும் நடுத்தர மக்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர் குறிப்பாக கிராமப்புற பெண்களின் வாழ்வாதாரமே பட்டாசு தொழில்தான்.
இந்தியா முழுவதற்கும் தேவையான தரமான பலவித பட்டாசுகள் இங்குதான் உற்பத்தி செய்து தயாரிக்கப்படுகிறது. மேலும் சிவகாசி பகுதியில் தயாரிக்கப்படும் பட்டாசுகள் வெளிநாடுகளுக்கும் பெருமளவில் ஏற்றுமதி செய்யப்படுகின்றன வெளிநாடுகளில் சிவகாசி பட்டாசுகளுக்கு பெரும் வரவேற்பு உள்ளது.
இந்தநிலையில் கரோனா வைரஸ் தொற்று பரவ காரணமாக வழக்கத்திற்கு மாறாக நிலைமை உள்ள போதிலும், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.
சீன பட்டாசுகளுக்கு மாற்றாக சிவகாசி பட்டாசுகளுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது.
ஆனால் ஏற்றுமதிக்கான கட்டணம் உற்பத்தி செலவைவிட அதிகமாகிறது இதனால் ஏற்றுமதி பாதிக்கிறது. எனவே மற்ற பொருள்களுக்கு இணையாக சரக்கு கப்பல் கட்டணத்தை குறைக்க வேண்டும்.
கப்பல் கட்டணத்தை குறைத்தால் சிவகாசியில் உற்பத்தியாகும் பட்டாசுகளை அதிகளவு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய முடியும்.இது நீண்டகாலமாக 'கரோனா' தடை உத்தரவு காரணமாக, பாதிக்கப்பட்டிருந்த தொழிலின் வளர்ச்சிக்கு உயிர் மூச்சாகவும் இருக்கும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.