முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சி தொடர வேண்டும் எனவும், அவர் தான் 2021 தேர்தலிலும் முதல்வர் வேட்பாளர் என்றும் பல்லடம் சட்டப்பேரவை உறுப்பினர் கரைப்புதூர் க.நடராஜன் தெரிவித்துள்ளார்.
திருப்பூர் மாவட்டம், பல்லடம் தொகுதிக்கு உள்பட்ட சுல்தான்பேட்டை, முதலிபாளையம், குளத்துப்புதூர் பகுதிகளில் வளர்ச்சித் திட்டப்பணிகள் தொடக்க விழா, மகளிருக்கு இருசக்கர வாகனம் வழங்கும் விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நேற்று (செப்.30) நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிகளை தொடக்கி வைத்த சட்டப்பேரவை உறுப்பினர் கரைப்புதூர் க.நடராஜன் செய்தியாளர்களிடம் கூறுகையில், "தற்பொழுது சிறப்பான ஆட்சி நடைபெற்று வருகிறது. இப்போதைய ஆட்சி தொடர வேண்டும். மேலும் மக்கள் அனைவரும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சியை விரும்புகின்றனர்.
அவர் தான் முதல்வர் வேட்பாளராக இருக்க வேண்டும். இப்பொழுது உள்ள தலைமையே 2021 தேர்தலிலும் நீடிக்க வேண்டும். சசிகலா தொடர்பான விஷயத்தில் தலைமையின் முடிவுக்குக் கட்டுப்படுவோம்" எனத் தெரிவித்தார்.