என்எல்சி இந்தியா நிறுவனத்தில் மூடப்பட்டுள்ள முதல் அனல்மின்நிலையத்தின் நுழைவுவாயில். 
தமிழகம்

தரம் சார்ந்த ஆயுட் காலம் முடிந்ததால் என்எல்சி முதல் அனல் மின் நிலையம் மூடல்

செய்திப்பிரிவு

தரம் சார்ந்த ஆயுட்காலம் முடிந்ததால், மத்திய பசுமை தீர்ப்பாயம் உத்தரவின்படி நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவனத்தின் முதலாவது அனல் மின் நிலையம் நேற்று மூடப்பட்டது.

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் பழுப்பு நிலக்கரி எடுக்க 1959-ம் ஆண்டு சுரங்கம் தோண்டப்பட்டது. தொடர்ந்து 1962-ம் ஆண்டு மின் உற்பத்திக்கான அனல் மின் நிலையம் தொடங்கப்பட்டது. இங்கு 1 மணி நேரத்துக்கு 600 மெகாவாட் மின்உற்பத்தி செய்யப்பட்டு வந்தது.

ஜெர்மன் மற்றும் ரஷ்ய தொழில்நுட்பங்களுடன் இந்த அனல் மின் நிலையம் வடிவமைக்கப்பட்டது. இந்த அனல் மின் நிலையத்துக்கு 25 ஆண்டுகள் காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. அதன் பின்னர், அதன் தரத்துக்கேற்ப ஆண்டுகள் நீட்டிக்கப்பட்டன. இடையில் ஓரிரு முறை அனல் மின் நிலையம் புதுப்பிக்கப்பட்டு, மீண்டும் இயங்க தொடங்கியது. உலக அளவில் ஒரு அனல் மின் நிலையம் 20 ஆண்டுகளுக்கு மேல் இயங்கக் கூடாது என வரையறை செய்யப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, ஆயுட்காலம் முடிந்த நிலையில் உள்ள நெய்வேலி முதலாவது என்எல்சி அனல் மின் நிலையத்தை மூடுவதற்கு மத்திய பசுமை தீர்ப்பாயம் அண்மையில் உத்தரவிட்டது. அதன் பேரில் நெய்வேலி என்எல்சி முதலாவது அனல் மின் நிலையம் நேற்று மூடப்பட்டது.

முதலாவது அனல் மின் நிலையத்தை மூடுவதால் ஏற்படும் மின் உற்பத்தி இழப்பை ஈடு செய்யும் வகையில் தற்போது புதிய அனல் மின் நிலையம் செயல்பட தொடங்கி உள்ளது. அந்த மின் நிலையத்தில் ஒரு மணி நேரத்துக்கு 1,000 மெகாவாட் மின் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

தற்போது 500 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. நிர்ணயித்த இலக்கின்படி 1,000 மெகாவாட் மின் உற்பத்தி விரைவில் தொடங்கும் என்று என்எல்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மூடப்பட்ட முதலாவது அனல் மின் நிலையத்தில் பணியாற்றிய தொழிலாளர்கள் என்எல்சியின் மற்ற அனல் மின் நிலையயங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

SCROLL FOR NEXT