பழனிசாமி 
தமிழகம்

விலை மதிப்பற்ற மனித உயிர்களை காக்க தன்னார்வத்துடன் ரத்த தானம் செய்வோம்: மக்களுக்கு முதல்வர் பழனிசாமி வேண்டுகோள்

செய்திப்பிரிவு

தன்னார்வ ரத்த தானத்தில் நாட்டிலேயே முன்னோடி மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. விலை மதிப்பற்ற உயிர்களை காப்பாற்ற மக்கள் அனைவரும் ரத்த தானம் செய்ய முன்வர வேண்டும் என்று முதல்வர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக முதல்வர் நேற்று வெளியிட்டுள்ள செய்தி:

விலைமதிப்பற்ற மனித உயிர்தளை காப்பாற்றும் ரத்த தானத்தின் அவசியம் குறித்தும், ரத்த தானம் செய்வது குறித்தும் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் அக்டோபர் 1-ம் தேதி (இன்று) தேசிய தன்னார்வ ரத்த தான நாள் கடைபிடிக்கப்படுகிறது. ‘தன்னார்வ ரத்த தானம் செய்து, கரோனாவுக்கு எதிரான போராட்டத்துக்கு பங்களிப்போம்’ என்பதே இன்றைய ரத்த தான நாளின் கருப்பொருள் ஆகும்.

அரசு ரத்த வங்கி மற்றும் தன்னார்வ ரத்தக் கொடையாளர்களை இணைக்கும் வகையில் சமூக ஊடக முகநூலை அரசு உருவாக்கியுள்ளது. ரத்த தான முகாம்களில் சேகரிக்கப்படும் ரத்தத்தை பாதுகாப்பாக எடுத்துச் செல்ல அரசு ரத்த வங்கிகளுக்கு 10 அதிநவீன குளிர்சாதன வசதிகளுடன் கூடிய ரத்த தான ஊர்திகள், 107 ரத்த வங்கி குளிர்சாதன பெட்டிகள் வழங்கப்பட்டுள்ளன.

ரத்தப் பரிமாற்றம் மூலம் பரவும் நோய்களை பரிசோதனை செய்ய, 5 அரசு ரத்த வங்கிகளுக்கு நவீன தானியங்கி பரிசோதனை இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. அரசு ரத்த வங்கிகளின் சேவைகளை வலுப்படுத்தும் நோக்கில் இதுபோல பல திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம், மாநில குருதி பரிமாற்றுக் குழுமம் இணைந்து, தமிழகத்தில் தன்னார்வ ரத்த தானம் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றன.

ஆண்டுதோறும் சிறப்பாக பணியாற்றும் தன்னார்வ ரத்த தானம் முகாம் அமைப்பாளர்கள், அரசு ரத்த வங்கி ஊழியர்களுக்கு அரசு சார்பில் மாவட்ட ஆட்சியர்கள் பாராட்டுச் சான்றிதழ், பதக்கங்கள் வழங்கி கவுரவித்து வருகின்றனர்.

கரோனா காலகட்டத்தில் தொடர் தன்னார்வ ரத்தக் கொடையாளர்கள், செஞ்சுருள் சங்கம், நாட்டு நலப்பணி திட்டம் மற்றும் தன்னார்வலர்களிடம் இருந்து 1 லட்சத்து 77 ஆயிரத்து 500 அலகுகள் ரத்தம் சேகரிக்கப்பட்டு, ரத்தம் தேவைப்படும் நோயாளிகளுக்கு 1 லட்சத்து 74 ஆயிரம் அலகுகள் இலவசமாக வழங்கப்பட்டுஉள்ளது.

தமிழகம் முன்னோடி

தன்னார்வ ரத்தக் கொடையாளர்கள் மூலம் ரத்தத்தை சேகரிப்பதில் நாட்டிலேயே தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது. இந்த ஆண்டு தன்னார்வ ரத்த தானத்தில் தமிழகம் 100 சதவீத இலக்கை அடைய மக்கள் அனைவரும் ரத்த தானம் செய்ய ஆர்வத்துடன் முன்வர வேண்டும்.

இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT