செங்கல்பட்டில் சிறப்பு ரயிலில் அனுமதிக்கப்படாததால் அதிகாரிகள், அரசு ஊழியர்கள் அவதிக்குஉள்ளாயினர்.
‘கரோனா’ முழு ஊரடங்கில் தற்போது பல்வேறு தளர்வுகள் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் ரயில்வே துறையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு என செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரை வரை சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயிலில் தமிழக அரசு அனுமதியுடன் தலைமைச் செயலக ஊழியர்கள், மருத்துவத் துறை, நீதிமன்ற ஊழியர்கள், வணிகவரித் துறை, கல்வித்துறை உள்ளிட்ட அலுவலகங்களுக்கு செல்லும் ஊழியர்கள், ரயில்வே துறையின் சிறப்பு அனுமதியுடன் பயணித்து வந்தனர்.
இந்நிலையில் நேற்று காலை வழக்கம்போல பணிக்கு செல்ல செங்கல்பட்டு ரயில் நிலையத்துக்கு வந்த நூற்றுக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்களை, செங்கல்பட்டு ரயில் நிலைய வாயிலில் ரயில்வே போலீஸார் தடுத்து நிறுத்தினர். மருத்துவ ஊழியர்களை தவிர வேறு யாருக்கும் ரயிலில் பயணம்செய்ய அனுமதி இல்லை எனக்கூறி, அரசு ஊழியர்களை ரயில்நிலையத்தில் இருந்து வெளியேற்றினர். தாம்பரம், மாம்பலம்உள்ளிட்ட சில ரயில் நிலையங்களிலும் இதேநிலை நீடித்தது.
அரசு ஊழியர்கள் சிலர் கூறியதாவது: செங்கல்பட்டிலிருந்து தலைமைச் செயலகம் வரைஅரசின் அனைத்து துறை ஊழியர்களும் சிறப்பு ரயிலில் பயணம்மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று திடீரென ரயில்வே போலீஸார் ரயில் நிலையத்துக்குள் நுழைய விடாமல் தடுத்து திருப்பி அனுப்பினர். காரணத்தையும் முறையாக தெரிவிக்கவில்லை. ரயில்களில் சரியான சமூக இடைவெளியை பின்பற்றி பயணிக்க வசதியாக உள்ளதால் சென்னை தலைமைச் செயலகம் உட்பட அனைத்து அரசு அலுவலகங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு சிறப்பு ரயிலில் அனுமதி அளிக்க வேண்டும் என எதிர்பார்க்கிறோம் என்றனர்.
இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: அரசு ஊழியர்கள் எனக் கூறி அரசு ஊழியர் அல்லாதோரும் ரயிலில் பயணிக்கின்றனர். இதனால் கரோனா தொற்று அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்பதால் அனைத்து அரசு ஊழியர்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தனர்.