மதுரை உலகத் தமிழ்ச் சங்கம், சென்னை அரண் தமிழ் அறக் கட்டளை இணைந்து தென்கிழக்காசியாவில் தமிழர் ஆட்சி, பண்பாட்டு பரவலும் எனும் தலைப்பில் 10 நாள் பன்னாட்டு இணையவழி கருத்தரங்கை நடத்துகின்றன.
கருத்தரங்கின் 2 வது நாளான இன்று மலேசியாவைச் சேர்ந்த துரைமுத்து சுப்ரமணியம் ‘ சொர்ணபூமியில் மலேசிய தமிழர்கள்’ என்ற தலைப்பில் பேசியதாவது:
சோழர்களின் வழித்தோன்றலான பரமேஷ்வரா என்ற மன்னன் மலேயா மண்ணை ஆட்சி செய்தவனில் ஒருவன். 1513- ல் இவனது ஆட்சி இருந்ததாக அறியப்படுகிறது.
மலையூர் என்ற மலேயா பின்பு, மலாக்கா என்ற பட்டிணத்தை நிறுவி, தமிழ் மன்னர் பரம்பரை ஆண்டதாகக் கூறப்படுகிறது. தமிழர்களின் தொன்மை அடையாளங்கள் மலேசியாவின் பூஜாங் பள்ளத் தாக்கில் தென்படுகின்றன.
மலாயா மொழியில் தமிழ் மொழிக் கூறுகள் காணப்படுகின்றன. சீன, மலாய், இந்திய கலப்பினமாக அங்கு மலாக்கா செட்டி என்ற ஒரு இனம் உருவானது, என்றார்.
நிகழ்ச்சிக்கு தமிழ்ச் சங்க இயக்குநர் அன்புச்செழியன் தலைமை வகித்தார். அரண் அறக்கட்டளை தலைவர் கிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.
ஆய்வு வளமையர் ஜான்சிராணி, கணினி செயல்முறையாளர் செல்வராணி கருத்தரங்கை ஒருங்கிணைத்தனர். நிகழ்வில் இலங்கை பேராசிரியர் சண்முகதாஸ், ஆஸ்திரேலியா நாகை சுகுமாறன் உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த பேராசிரியர்கள், தமிழார்வலர்கள் பங்கேற்றனர்.