சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் ஆக்கிரமிப்பில் இருந்த வீடு, கடைகளை அகற்றி பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள புறம்போக்கு நிலத்தை வருவாய்த்துறையினர் மீட்டனர்.
காரைக்குடி நேதாஜி சாலையில் 25 ஆண்டுகளாக அரசு புறம்போக்கு நிலம் மற்றும் கால்வாயை ஆக்கிரமித்து சிலர் வீடுகள், கடைகளை கட்டிருந்தனர்.
இதுதொடர்பான வழக்கில் ஆக்கிரமிப்புகளை அகற்ற உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து அப்பகுதியில் வட்டாட்சியர் ஜெயந்தி தலைமையில் வருவாய்த்துறையினர் அளவீடு செய்ததில் ஆக்கிரமிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.
இதையடுத்து போலீஸார் உதவியோடு இன்று ஆக்கிரமிப்பில் இருந்த 3 வீடுகள், 2 கடைகளை அகற்றி பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள புறம்போக்கு நிலம் மற்றும் கால்வாயை வருவாய்த்துறையினர் மீட்டனர்.
அப்போது ஆக்கிரமிப்பாளர்கள் வருவாய்த்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து 50-க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டு ஆக்கிரமிப்புகள் முழுமையாக அகற்றப்பட்டன.