சில்லறையாக விற்கப்படும் இனிப்புகளுக்கும் நாளை (அக்.1) முதல் இனிப்பு வகைகளின் காலாவதி தேதியைக் கட்டாயம் குறிப்பிட வேண்டும் என்று கோவை மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலர் தெரிவித்துள்ளார்.
பேக்கிங் செய்யப்பட்டு விற்கப்படும் உணவுப் பொருட்களின் காலாவதி தேதி, தயாரிப்பு தேதி உள்ளிட்ட விவரங்களைக் குறிப்பிட வேண்டும் என்ற விதி உள்ளது. இந்நிலையில், சில கடைகளில் விற்கப்படும் இனிப்புகளின் தரம் சரிவர இல்லை என உணவுப் பாதுகாப்பு துறைக்குப் புகார்கள் வந்தன.
அதைத் தொடர்ந்து பேக்கிங் செய்யப்படாமல் சில்லறையாக விற்கப்படும் இனிப்புகளுக்கும் காலாவதி தேதி விவரத்தைத் தெரிவிக்க வேண்டும் என இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (எஃப்எஸ்எஸ்ஏஐ) அனைத்து மாநில உணவுப் பாதுகாப்புத் துறை ஆணையர்களுக்கும் கடந்த 25-ம் தேதி உத்தரவை ஒன்றை அனுப்பியுள்ளது. அந்த உத்தரவு நாளை (அக்.1) முதல் நடைமுறைக்கு வர உள்ளது.
இதுதொடர்பாகக் கோவை மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் தமிழ்ச்செல்வன் கூறியதாவது:
''புதிய உத்தரவுப்படி இனிப்பு வகைகள் எத்தனை நாட்களுக்குள் உட்கொள்ளத் தகுந்தது என்பதை வாடிக்கையாளர்களுக்குக் கடைக்காரர்கள் தெரியப்படுத்த வேண்டும். அதற்கேற்ப ஒவ்வொரு இனிப்பு வகையின் விலைக்கு அருகிலேயே காலவதி தேதியைத் தெரியப்படுத்த வேண்டும். மேலும், மிகக் குறுகிய காலத்தில் கெட்டுப்போகக் கூடிய பட்டர் ஸ்காட்ச் குல்கந்து, ரோஸ் குல்கந்து போன்ற இனிப்புகளை ஒரே நாளில் பயன்படுத்த வேண்டும்.
குறுகிய காலத்தில் கெட்டுவிடும் ரசகுல்லா, ரசமலாய் போன்ற பால் பொருட்கள், பெங்காலி இனிப்புகளை இரண்டு நாட்களில் பயன்படுத்த வேண்டும். அவற்றைக் குளிர்சாதனப் பெட்டியில் 1 டிகிரி முதல் 4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் பராமரிக்க வேண்டும். நடுத்தர கால அளவு கொண்ட லட்டு போன்ற இனிப்புகளை அதிகபட்சம் 4 நாட்கள் பயன்படுத்தலாம்.
நீண்ட கால அளவு கொண்ட நெய் மற்றும் உலர்ந்த பழங்கள் கலந்த இனிப்புகளை 7 நாட்கள் வரை பயன்படுத்தலாம். இதுதவிர, தயாரிக்கப்பட்ட இனிப்பு வகையானது எண்ணெய், நெய், வனஸ்பதி என எதைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்டது என்பதையும் கடைக்காரர்கள் தெரிவிக்க வேண்டும். இந்த விதிகளை மீறு கடைக்காரர்கள் மீது உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்''.
இவ்வாறு அவர் கூறினார்.