தமிழகம்

அக்.2 முதல் சென்னை-ரமேஸ்வரத்திற்கு சிறப்பு ரயில் இயக்க முடிவு: சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட பயணிகள் மகிழ்ச்சி

இ.ஜெகநாதன்

சென்னை - ராமேஸ்வரத்திற்கு அக்.2-ம் தேதி முதல் சிறப்பு ரயில் இயக்க தென்னக ரயில்வே முடிவு செய்துள்ளது. இதனால் சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

கரோனா வைரஸ் தொற்றை தடுக்க பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் 5 மாதங்களாக ரயில்கள் இயக்கப்படவில்லை. இந்நிலையில் செப்.7-ம் தேதி முதல் எக்ஸ்பிரஸ் ரயில்கள், சிறப்பு ரயில்களாக மாற்றப்பட்டு இயக்கப்பட்டு வருகின்றன. இதில் காரைக்குடியில் இருந்து சென்னை செல்லும் பல்லவன் அதிவிரைவு ரயில் சிறப்பு ரயிலாக இயக்கப்படுகிறது.

அதேபோல் ஏற்கெனவே ஒருநாள் இடைவெளியில் இயக்கப்பட்டு வந்த சென்னையில் இருந்து செங்காட்டை செல்லும் சிலம்பு ரயில், தற்போது தொடர்ந்து மூன்று நாட்கள் இயக்கப்படுகிறது.

இந்த ரயில் செப்.10-ம் தேதி முதல் சென்னையில் இருந்து வியாழன், வெள்ளி மற்றும் சனிக்கிழமையும், மறுமார்க்கத்தில் செப்.12-ம் தேதி முதல் செங்கோட்டையில் இருந்து சனி, ஞாயிறு, திங்கட்கிழமையும் இயக்கப்பட்டு வருகிறது.

மேலும் காரைக்குடி, சிவகங்கை வழியாக ராமேஸ்வரத்திற்கு சேது எக்ஸ்பிரஸ், ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்பட்டு வந்தன. அதேபோல் பல்வேறு பகுதிகளில் இருந்து மதுரை, மானாமதுரை வழியாக ராமேஸ்வரத்திற்கு ரயில்கள் இயக்கப்பட்டு வந்தன.

இந்த இரண்டு வழித்தடங்களிலும் தற்போது ராமேஸ்வரத்திற்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படவில்லை. இதையடுத்து ராமேஸ்வரத்திற்கு சிறப்பு ரயில் இயக்க வேண்டுமென, பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வந்தனர்.

இந்நிலையில் அக்.2-ம் தேதி முதல் சென்னையில் இருந்து காரைக்குடி, சிவகங்கை வழியாக சிறப்பு ரயில் இயக்க தென்னக ரயில்வே முடிவு செய்துள்ளது.

இந்த ரயில் அக்.2-ம் தேதி மாலை 5.45 மணிக்கு சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4.25 மணிக்கு ராமேஸ்வரத்தை அடையும். காரைக்குடியை இரவு 12.48 மணிக்கும், சிவகங்கையை இரவு 1.28 மணிக்கும், மானாமதுரையை இரவு 1.58 மணிக்கும் அடையும்.

மறுமார்க்கத்தில் இரவு 8.25 மணிக்கு ராமேஸ்வரத்தில் இருந்து புறப்பட்டு காலை மறுநாள் 7.15 மணிக்கு சென்னை எலும்பூரை அடையும்.
மானாமதுரையை இரவு 10.13 மணிக்கும், சிவகங்கையை இரவு 10.38 மணிக்கும், காரைக்குடியை இரவு 11.28 மணிக்கும் அடையும். இதனால் சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

SCROLL FOR NEXT