பாபர் மசூதி இடிப்பு வழக்கில் காங்கிரஸின் கனவு பலிக்கவில்லை என பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா கூறினார்.
மதுரையில் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா, செய்தியாளர்களிடம் இன்று கூறுகையில், "பாபர் மசூதி இடிப்பு வழக்கில் நீதிமன்றத் தீர்ப்பு வரவேற்கதக்கது. இந்த வழக்கு ஒரு சதி வழக்கு என்பது நீதிமன்றத் தீர்ப்பில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
அத்வானி நடத்திய ரத யாத்திரைக்கும் பாபர் மசூதி இடிப்புக்கும் சம்பந்தம் இல்லை என்றும், முன்னணித் தலைவர்களுக்கும் அந்தச் சம்பவத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும், நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட வீடியோக்கள் தவறானவை என்றும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் சோனியா காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சியின் கனவு பலிக்கவில்லை.
பாஜக தலைவர்களின் பெயருக்குக் களங்கம் ஏற்படுத்த பாபர் மசூதி வழக்குத் தொடரப்பட்டது. அந்தக் கனவும் நிறைவேறவில்லை.
இந்து முன்னணி தலைவர் ராமகோபாலன் மறைவு அதிர்ச்சி அளிக்கிறது. அவர் இந்து மதத்தினரை ஒருங்கிணைக்கும் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர்" என்று ஹெச்.ராஜா கூறினார்.
பாபர் மசூதி இடிப்பு வழக்குப் பின்னணி:
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் இருந்த பாபர் மசூதி, கடந்த 1992-ம் ஆண்டு டிசம்பர் 6-ம் தேதி கரசேவகர்களால் இடிக்கப்பட்டது. இந்த வழக்கில் பாஜக மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி, முன்னாள் முதல்வர் கல்யாண் சிங் உட்பட 49 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. அவர்களுக்கு எதிராக சிபிஐ குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்தது.
கடந்த 2017-ம் ஆண்டில் இருந்து லக்னோவில் உள்ள சிபிஐ நீதிமன்றத்தில், உச்ச நீதிமன்றத்தின் கண்காணிப்பில் தினந்தோறும் விசாரணை நடந்து வந்தது. இம்மாதத் தொடக்கத்தில் விசாரணை நிறைவடைந்தது. இதையடுத்து தேதி குறிப்பிடப்படாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.
இந்த வழக்கில் சிறப்பு நீதிமன்ற நீதிபதி யாதவ் இன்று தீர்ப்பளித்தார். அதில், குற்றம் சாட்டப்பட்ட 32 பேரையும் விடுவித்தார். அவர்களுக்கு எதிராகப் போதுமான ஆதாரங்களை நிரூபிக்க சிபிஐ தவறிவிட்டது எனத் தீர்ப்பளித்தார்.
இந்தத் தீர்ப்பை பாஜகவினர் வரவேற்று வரும் நிலையில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சிபிஐ நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து மத்திய, மாநில அரசுகள் மேல்முறையீடு செய்ய வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன.