பாதிக்கப்பட்ட பயிர்களைப் பார்வையிடும் பி.ஆர்.பாண்டியன். 
தமிழகம்

தொடர் மழையால் பாதிக்கப்பட்டுள்ள டெல்டா குறுவைப் பயிர்கள்: உரிய இழப்பீடு வழங்கக் கோரிக்கை

கரு.முத்து

மழையால் பாதிக்கப்பட்டுள்ள குறுவைப் பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று தமிழகக் காவிரி விவசாயிகள் சங்கப் பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் கோரிக்கை விடுத்துள்ளார்.

டெல்டா பகுதியில் பெய்து வரும் தொடர் மழையால் பாதிக்கப்பட்ட குறுவை சாகுபடிப் பயிர்களை பி.ஆர்.பாண்டியன் நாகை மாவட்டத்தில் இன்று பார்வையிட்டார்.

அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்ததாவது:

"நாகப்பட்டினம் அருகே சிராங்குடி புலியூர், தேமங்கலம், சங்கமங்கலம், பாலையூர், பெருங்கடம்பனூர், இளம்கடம்பனூர், சிக்கல், தெத்தி, ஐவநல்லூர், வடகுடி திருக்கண்ணங்குடி உட்பட 10-க்கும் மேற்பட்ட வருவாய் கிராமங்களில் கடந்த நான்கு தினங்களாகப் பெய்து வரும் கடும் மழையால் அறுவடைக்குத் தயாராக இருந்த சுமார் 5,000 ஏக்கர் குறுவைப் பயிர்கள் முற்றிலும் சாய்ந்து நீரில் மூழ்கி அழுகத் தொடங்கியுள்ளன.

தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒரத்தநாடு பகுதிகளிலும் திருவாரூர் மாவட்டத்தில் கோட்டூர், திருவாரூர், திருத்துறைப்பூண்டி உள்ளிட்ட ஒன்றியங்களிலும் கடும் மழையால் அறுவடைக்குத் தயாராக இருந்த சுமார் பத்தாயிரம் ஏக்கர் முதல் 20 ஆயிரம் ஏக்கர் வரையிலான குறுவை சாகுபடிப் பயிர்கள் கடும் மழைக் காற்றால் சாய்ந்து நீரால் சூழப்பட்டுள்ளன. இதேபோல திருவாரூர் மாவட்டத்தில் பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பயிர்கள் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றன.

இதனால் மிகப்பெரும் இழப்பைச் சந்தித்துள்ள விவசாயிகள், ஏற்கெனவே குறுவைக்கான காப்பீடு செலுத்தியுள்ளனர். தமிழக அரசாங்கம் ஓர் உயர்மட்டக் குழுவை அனுப்பிப் பாதிப்பைக் கணக்கீடு செய்து காப்பீட்டு நிறுவனம் மூலமாக உரிய இழப்பீடு கிடைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்துகிறேன்.

எம்.எஸ்.சுவாமிநாதன் அறிக்கையின்படிதான் புதிய வேளாண் சட்டமா?

விவசாயிகளுக்கு நலத் திட்டம் என்கிற பெயரில் பன்னாட்டுப் பெரு முதலாளிகளுக்கு ஆதரவாக மத்திய அரசால் கொண்டு வரப்பட்டிருக்கிற வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் தீவிரப் போராட்டத்தில் களமிறங்கியுள்ளனர். விவசாயிகள் போராட்டத்தின் தீவிரத்தை உணர்ந்து, சட்டத்தில் விவசாயிகளுக்குச் சாதகமான வழிகாட்டுதல்களாக மாற்றுவதற்குப் பதிலாக போராட்டங்களைத் திசை திருப்புவதற்கான வகையில் பிரதமர் மோடி கருத்துத் தெரிவித்திருக்கிறார்.

எம்.எஸ்.சுவாமிநாதன் குழு பரிந்துரையையே நாங்கள் சட்டமாகக் கொண்டு வந்திருக்கிறோம் என்று முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மறைக்கும் விதமாக மோடி கருத்துத் தெரிவித்திருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

அது உண்மையாக இருக்குமேயானால் உற்பத்திச் செலவைக் கணக்கிட்டு அவற்றில் 50 சதவிகிதத்தை லாபமாக இணைத்து விலை நிர்ணயம் செய்வதற்கான நடவடிக்கையை உடனடியாகத் தொடங்க வேண்டும். விவசாயிகளோடும், வணிகர்களிடமும் அரசே ஒப்பந்தம் போட்டுக் கொள்முதல் செய்வதற்கான உத்தரவாதத்தை அளிக்கவேண்டும்.

அதேபோல விவசாய மேம்பாட்டுத் திட்டங்களுக்கு அந்நிய முதலீட்டை அனுமதிப்பதையும், ஆன்லைன் வர்த்தகத்தை அனுமதிப்பதையும் கைவிட வேண்டும். உள்நாட்டுச் சந்தை விற்பனையை மத்திய, மாநில அரசுகள் மூலமாகப் பொறுப்பேற்றுச் செயல்படுத்துவதற்கு முன்வர வேண்டும்''.

இவ்வாறு பி.ஆர்.பாண்டியன் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT