தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை 5,500 கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் அனைத்து இடங்களிலும் கண்காணிப்பு கேமிராக்களை பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் தெரிவித்தார்.
தூத்துக்குடி மாவட்டத்தின் முக்கிய நகரங்கள் மட்டுமின்றி கிராமப்புற பகுதிகளிலும் சிசிடிவி கேமிராக்கள் பொருத்தப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி பழைய பேருந்து நிலைய பகுதியில் புதிதாக 16 கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதற்கான கட்டுப்பாட்டு மையம் பழைய பேருந்து நிலைய புறக்காவல் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
இங்குள்ள மின்திரை மூலம் இந்த கேமிராக்கள் 24 மணி நேரமும் கண்காணிக்கப்படும். இந்த கண்காணிப்பு கேமிராக்களின் செயல்பாடுகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் இன்று தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து எஸ்பி ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது: குற்றங்களை கண்டுபிடிப்பதற்கும், குற்றங்கள் நடவாமல் இருப்பதற்கும் சிசிடிவி கேமரா என்பது பெரிதும் உதவியாக உள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி, கோவில்பட்டி மற்றும் திருச்செந்தூர் போன்ற நகர்புறங்களில் மட்டுமல்லாமல், கிராமப்புறங்களிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகிறது.
மாவட்டத்தில் நகர்புறம் மற்றும் கிராமப்புறங்களில் தற்போது 5,500 சிசிடிவி கேமராக்கள் செயல்பட்டு வருகின்றன. மேலும், பெரும்பாலான இடங்களில் கேமரா பொருத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது என்றார் எஸ்பி.
இந்த நிகழ்வின் போது தூத்துக்குடி காவல் துணை கண்காணிப்பாளர் கணேஷ், மத்திய பாகம் காவல் ஆய்வாளர் ஜெயப்பிரகாஷ், போக்குவரத்து காவல் ஆய்வாளர் மயிலேறும் பெருமாள், மத்திய பாகம் காவல்நிலைய உதவி ஆய்வாளர் ராஜாமணி உள்ளிட்ட காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.