திருநெல்வேலி மாநகராட்சி ராமையன்பட்டி குப்பை சேகரிப்பு மைய வளாகத்தில் குறுங்காடு உருவாக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இத் திட்டத்தின்கீழ் மரக்கன்றுகள் நட்டு வளர்க்கப்படுவதை மாநகராட்சி ஆணையர் ஜி.கண்ணன் ஆய்வு செய்தார்.
அப்போது அவர் கூறும்போது, ராமையன்பட்டி குப்பை சேகரிப்பு மைய வளாகத்தில் குறுங்காடுகளை உருவாக்கும் திட்டத்தில் மரங்கள் வளரும்போது, எதிர்காலத்தில் மாணவ-மாணவியர்கள் பார்வையிடும் ஒரு பசுமை மையமாக திகழும்.
திருநெல்வேலி மாநகராட்சி பகுதிகளில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் பொருட்டு, பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.
மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 17 ஆயிரம் மரக்கன்றுகளை நடவு செய்திட உலக சுற்றுச்சூழல் தினத்தினை முன்னிட்டு திட்டமிடப்பட்டு, இதுவரை 12 ஆயிரம் பலவகையான மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளது.
இயற்கை காடுகளின் ஆய்வு ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்று, தரிசு நிலங்களில் இயற்கை தாவரங்களை மீட்டெடுப்பதில் நிபுணராக சிறந்து விளங்கிய “அகிரா மியாவாகி” என்ற தாவரவியலாளரின் வழிகாட்டுதலில் குறுங்காடுகள் அமைப்பதன் அவசியம் கருதி, மாநகராட்சிக்கு சொந்தமான ராமையன்பட்டி குப்பை சேகரிப்பு மைய வளாகத்தில் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
இதுவரை 6 ஆயிரம் பலவகை மரக்கன்றுகளை நெல்லை நேச்சர் கிளப், மற்றும் ஐந்திணை அமைப்பு உதவியுடன் வழிகாட்டுதலின்படி, நடவு செய்யப்பட்டு தற்போது நல்ல வளம் பெற்றுள்ளது என்று தெரிவித்தார்.