தமிழகம்

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தென்காசியில் 151 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம்: மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு

த.அசோக் குமார்

தென்காசி மாவட்டத்தில் நாளை அக்டோபர் 2-ம் தேதி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு காலை 7 மணி முதல் தென்காசி, செங்கோட்டை, கடையநல்லூர், புளியங்குடி உள்ளிட்ட 151 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறுகிறது.

உயர் ரத்த அழுத்தம், நீரழிவு போன்ற நோய்கள் மக்களின் ஆரோக்கியத்தை தீர்மானிக்கும் காரணிகளாக உள்ளன. இது போன்ற நோய்கள் உள்ள ஒருவருக்கு மற்ற நோய்கள் ஏற்படுவதற்கும், அவை தீவிரமடைவதற்கும் அதிக வாய்ப்புகள் உள்ளன.

ஆனால் பொதுமக்களிடம் இது போன்ற நோய்கள் தொடர்பான விழிப்புணர்வு குறைவாகவே உள்ளது. இந்நோய்கள் குறித்து ஆரம்ப கட்டத்திலேயே பரிசோதனை செய்யாமல் வேறு ஏதேனும் நோய்க்கு மருத்துவம் செய்யும்போது உயர் ரத்த அழுத்தம், நீரழிவு போன்ற நோய்களைக் கண்டறியும் நிலை உள்ளது.

ஆரம்ப கட்டத்திலேயே இந்நோய்களை கண்டறிந்தால் வாழ்வியல் முறையில் சிறிய மாற்றங்களைச் செய்வதன் மூலம் இந்நோய்களை கட்டுக்குள் வைக்கலாம்.

தென்காசி மாவட்டத்தில் 2-ம் தேதி காந்தி ஜெயந்தி நாளில் காலை 7 மணி முதல் தென்காசி, செங்கோட்டை, கடையநல்லூர், புளியங்குடி, சங்கரன்கோவில் நகராட்சிப் பகுதிகளிலும், மேலகரம், இலஞ்சி, சுரண்டை, ஆலங்குளம், கீழப்பாவூர், திருவேங்கடம், அச்சன்புதூர், சிவகிரி, வாசுதேநல்லூர் பேரூராட்சி பகுதிகளிலும் நீரழிவு நோய் உள்ளிட்ட நோய்களை கண்டறியும் இலவச சிறப்பு முகாம் மாவட்ட நிர்வாகம் மற்றும் பொது சுகாதாரத்துறை சார்பில் நடத்தப்படுகிறது.

இந்த பகுதிகளில் பேருந்து நிலையங்கள், மார்க்கெட், கடைத்தெரு போன்ற பொதுமக்கள் அதிகம் கூடும் 151 இடங்களில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

இந்த முகாம்களில் உயர் ரத்த அழுத்தம், நீரழிவோ அல்லது இதர நோய் கண்டறியப்பட்டால் தொடர் சிகிச்சையும், வாழ்வியல் முறை மாற்றத்துக்கான ஆலோசனைகளும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

எனவே, பொதுமக்கள் தாங்கள் வசிக்கும் இடங்களுக்கு அருகில் நடைபெறும் முகாம்களுக்கு சென்று தங்கள் உடல்நிலையை பரிசோதித்து பயன் பெறுமாறு தென்காசி மாவட்ட ஆட்சியர் அருண் சுந்தர் தயாளன் கேட்டுக்கொண்டுள்ளார்.

SCROLL FOR NEXT