காணொலிக் காட்சி மூலம் அடிக்கல் நாட்டிய முதல்வர் பழனிசாமி. 
தமிழகம்

திருப்பத்தூர் நகரின் மையப்பகுதியில் ரூ.109 கோடி மதிப்பில் ஆட்சியர் அலுவலகம்: காணொலிக் காட்சி மூலம் முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார்

செய்திப்பிரிவு

முதல்வர் பழனிசாமி திருப்பத்தூர் நகரில் 109 கோடியே 71 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகப் பெருந்திட்ட வளாகத்திற்கு, தலைமைச் செயலகத்தில் காணொலிக் காட்சி மூலமாக இன்று அடிக்கல் நாட்டினார்.

இது தொடர்பாக, தமிழக அரசு இன்று (செப். 30) வெளியிட்ட செய்திக்குறிப்பு:

"தமிழ்நாடு முதல்வர் கடந்த 15.8.2019 அன்று சுதந்திர தின விழா உரையில், பெரிய மாவட்டமாக உள்ள வேலூர் மாவட்டத்தைப் பிரிக்க வேண்டும் என்று அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோரிடமிருந்து வந்த கோரிக்கைகளைப் பரிசீலித்து, நிர்வாக வசதிக்காக, வேலூரைத் தலைமையிடமாகக் கொண்டு ஒரு மாவட்டமும், திருப்பத்தூரைத் தலைமையிடமாகக் கொண்டு ஒரு புதிய மாவட்டமும், ராணிப்பேட்டையைத் தலைமையிடமாகக் கொண்டு ஒரு புதிய மாவட்டமும் தோற்றுவிக்கப்படும் என்று அறிவித்தார்.

அந்த அறிவிப்புக்கிணங்க, மாநிலத்தின் 36-வது மாவட்டமாக திருப்பத்தூர் மாவட்டம் உருவாக்கப்பட்டது. புதியதாக உருவாக்கப்பட்ட திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் நகரில் 27 ஆயிரத்து 376 சதுர மீட்டர் பரப்பளவில், 109 கோடியே 71 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், தரை மற்றும் 7 தளங்களுடன் கட்டப்படவுள்ள திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்திற்கு தமிழ்நாடு முதல்வர் இன்று காணொலிக் காட்சி மூலமாக அடிக்கல் நாட்டினார்.

இப்புதிய வளாகத்தில், வருவாய்த் துறை, பொதுப்பணித் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, கருவூலம், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை போன்ற துறைகளின் அலுவலகக் கட்டிடங்கள் கட்டப்படவுள்ளன".

இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT