தமிழகம்

காவல், தீயணைப்பு, சிறைத் துறையினர் 130 பேருக்கு அண்ணா பதக்கம்: முதல்வர் ஜெயலலிதா உத்தரவு

செய்திப்பிரிவு

அண்ணா பிறந்த நாளையொட்டி, காவல், தீயணைப்பு மற்றும் சிறைத் துறையைச் சேர்ந்த 130 பேருக்கு அண்ணா பதக்கங்கள் வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக தமிழக அரசின் உள்துறை முதன்மைச் செயலாளர் அபூர்வ வர்மா இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணித் துறை, சிறைத் துறை, ஊர்க்காவல் படை மற்றும் தமிழ்நாடு விரல்ரேகைப் பிரிவு அலுவலர்களின் சிறந்த பணியை அங்கீகரிக்கும் வகையில் ஒவ்வோர் ஆண்டும் அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15-ம் தேதி தமிழக முதல்வரின் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், இந்த ஆண்டு காவல்துறையில் கண்காணிப்பாளர் தொடங்கி முதல்நிலைக் காவலர் வரை 100 பேருக்கும், தீயணைப்புத் துறையில் மாவட்ட தீயணைப்பு அலுவலர் முதல் தீயணைப்பு வீரர் வரை 10 பேருக்கும், சிறைத்துறையில் கண்காணிப்பாளர் முதல் இரண்டாம் நிலை சிறைக் காவலர்கள் வரை 10 பேருக்கும் ஊர்க்காவல் படையில் 8 பேருக்கும், விரல்ரேகை பிரிவில் 2 பேருக்கும் (டிஎஸ்பிக்கள்) ஆக மொத்தம் 130 பேருக்கு அண்ணா பதக்கம் வழங்க முதல்வர் ஆணையிட்டுள்ளார்.

பதக்கம் பெறும் அலுவலர்களுக்கு அவரவர் பதவிக்கு தக்கவாறு மொத்த மானியத் தொகையும், வெண்கல பதக்கமும் வழங்கப்படும். அவர்களுக்கான பதக்கங்களை முதல்வர் வழங்குவார்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT