தமிழகம்

அக்.2-ம் தேதி டிஜிட்டல் முறையில் 1,500 கிராமங்களில் பேசுகிறார் கமல்

செய்திப்பிரிவு

கமல்ஹாசன், மக்கள் நீதி மய்யம் கட்சியை தொடங்கியதில் இருந்து பல்வேறு பகுதிகளில் நடந்த கிராமசபை கூட்டங்களில் பங்கேற்று வந்தார். இந்நிலையில், வரும் அக்டோபர் 2-ம் தேதி கிராமசபை கூட்டம் நடத்தப்படுவது கேள்விக்குறியாக உள்ளது. எனவே, 1,500 கிராமங்களில் டிஜிட்டல் முறையில் உரையாற்ற கமல்ஹாசன் முடிவு செய்துள்ளார்.

இதுதொடர்பாக கட்சியினருக்கு மக்கள் நீதி மய்யம் துணை தலைவர் ஆர்.மகேந்திரன் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

கரோனா பரவல் காரணமாக கடந்த மே 1, ஆகஸ்ட் 15 ஆகிய 2 முறையும் கிராமசபை கூட்டம் நடத்தப்படாமல் கிராம வளர்ச்சிப் பணிகள், அவற்றுக்கான பட்ஜெட் ஒதுக்கீடுகள் தடைபட்டுள்ளன.

எனவே, அக்டோபர் 2-ம் தேதி 4 பேர் கொண்ட அணியாக கிராமங்களுக்கு சென்று கிராம முக்கியஸ்தர்களை சந்தித்து, கட்சித் தலைவர் கமல்ஹாசனுடன் டிஜிட்டல் முறையில் இணைக்க வேண்டும். ‘நாமே தீர்வு: கிராமங்கள் இணைப்பு’ என்ற இந்த முன்னெடுப்பை முதல்படியாக 1,500 கிராமங்களுக்கு கொண்டு செல்வோம்.

கிராமத்து இளைஞர்கள், தலைவர்களை டிஜிட்டல் முறையில் கமல்ஹாசனுடன் இணைத்து, அவர்கள் கிராம வளர்ச்சிக்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றி விவாதிப்பதே இதன் நோக்கம். இதில், கிராம வளர்ச்சிக்கு தேவையான நடவடிக்கைகளை எடுத்துரைக்க துறைசார் வல்லுநர்கள் பங்கேற்கின்றனர்.

SCROLL FOR NEXT