பண மதிப்பிழப்பு நடவடிக்கையின்போது ரூ.2000 நோட்டுகள் கைப்பற்றப்பட்டதாக தொழிலதிபர் சேகர் ரெட்டி உள்ளிட்டோர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை சிபிஐ நீதிமன்றம் முடித்துவைத்துள்ளது.
கடந்த 2016 நவம்பரில் பண மதிப்பிழப்பு நடவடிக்கையை மத்திய அரசு அறிவித்தது. அப்போது, தொழிலதிபர் சேகர்ரெட்டியின் வீட்டில் ரூ.2000 நோட்டுகள் அதிக அளவில் கைப்பற்றப்பட்டன. இதுதொடர்பாக சேகர் ரெட்டி மற்றும் அவரதுநண்பர்கள் 6 பேர் மீது சிபிஐ போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.
இதில், ரூ.24 கோடிக்கு பணம் கைப்பற்றப்பட்டது தொடர்பாக சேகர் ரெட்டி மீதான வழக்கு சென்னை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள சிபிஐ நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தது.
இந்த வழக்கில் சேகர் ரெட்டி உள்ளிட்ட 6 பேர் மீதும் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய போதுமான ஆதாரங்கள் கிடைக்கவில்லை என்பதால் இந்த வழக்கை முடித்துவைக்க வேண்டும் என்று சிபிஐ தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி ஜவஹர், குற்றம் சாட்டப்பட்ட சேகர் ரெட்டி உள்ளிட்ட 6 பேர் மீதான வழக்கை முடித்துவைத்து உத்தரவிட்டுள்ளார்.