தமிழகம்

ஏலத்தோட்ட தொழிலாளர்களுக்கு இ-பாஸ்  தளர்வால் குமுளியில் நெரிசல்: பரிசோதனைக்காக வெகுநேரம் காத்திருப்பு

என்.கணேஷ்ராஜ்

ஏலத்தோட்ட தொழிலாளர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள இ-பாஸ் தளர்வினால் குமுளியில் கூட்டம் அதிகரித்துள்ளது. கேரள அரசின் பரிசோதனைக்காக வெகுநேரம் வரிசையில் காத்திருக்கும் நிலை உள்ளது.

கரோனா பரவலைத் தடுக்க தமிழக ஏலத்தோட்ட விவசாயிகளை கேரளாவிற்குள் அனுமதிக்காத நிலை இருந்தது. இந்நிலையில் தற்போது ஒருநாள், ஒருமாதம், 3 மாதம் மற்றும் 6 மாத இ-பாஸ் தொழிலாளர்களுக்கு வழங்கப்படுகிறது.

வேலை முடிந்ததும் தினமும் தமிழகப்பகுதிக்கு திரும்பி வந்துவிட வேண்டும் என்ற நிபந்தனையோடு இந்த அனுமதி வழங்கப்படுகிறது.

இதனால் குமுளியில் நெரிசல் அதிகரித்து பல மணி நேரம் காத்திருக்கும் நிலை உள்ளது.

ஏலத்தோட்ட தொழிலாளர்கள் கூறுகையில், "நாங்கள் மட்டுமல்லாது கேரளாவிற்கு பல்வேறு பணிகள், சொந்த ஊர் செல்பவர்களுக்கும் ஒரே வரிசைதான்.

தற்போது இ-பாஸ் அளிப்பதில் தளர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளதால் நெரிசல் அதிகரித்து விட்டது. எனவே கம்பம்மெட்டு, போடிமெட்டு உள்ளிட்ட பாதைகளிலும் அதிகாரிகளை அதிகளவில் நியமித்து நெரிசலை முறைப்படுத்த வேண்டும் என்றனர்.

கேரள சுகாதாரத்துறையினர் கூறுகையில், கேரளாவிற்கு வாளையாறு உள்ளிட்ட பகுதி வழியே வருபவர்கள் கேரளத்தின் பல பகுதிகளுக்கும் செல்கின்றனர்.

ஆனால் தமிழக தொழிலாளர்கள் இடுக்கி மாவட்டத்திற்குத்தான் வருகின்றனர். இடுக்கி மாவட்டத்தில் மருத்துவ வசதி குறைவு. கோட்டயம்தான் செல்ல வேண்டும். தொற்று பரவினால் சிக்கல் ஏற்படும் என்பதால் இந்தப்பாதையில் அதிகளவில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்" என்றனர்.

SCROLL FOR NEXT