இளையான்குடி அருகே கண்மாயில் சட்டவிரோதமாக மணல் அள்ளி விற்பனை செய்வதைத் தடுக்கக்கோரிய வழக்கில் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இளையான்குடி மேலையூரை சேர்ந்தவர் அசோக்குமார், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:
மேலையூர் கண்மாயில் குடிமராமத்து என்ற பெயரில் கண்மாயை சீரமைக்க சிலருக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. இதைப்பயன்படுத்தி எங்கள் ஊரைச் சேர்ந்த ஒருவர் மராமத்துப் பணிகள் செய்வதாகக் கூறி கண்மாயிலிருந்து 240 யூனிட் மணல் அள்ளி தனது சொந்த இடத்தில் பதுக்கி வைத்துள்ளார்.
இது குறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், இளையான்குடி போலீஸாருக்கு புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.
எனவே சட்டவிரோதமாக மணல் வியாபாரம் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், மேலையூர் கண்மாயில் மணல் எடுக்க தடை விதித்தும் உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் அமர்வில் விசாரணைக்கு வந்தது. சிவகங்கை ஆட்சியர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை 4 வாரங்களுக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.