திருநெல்வேலியில் சமூக இடைவெளி இல்லாமலும், முகக்கவசம் அணியாமலும் மக்கள் நடமாட்டம் அதிகரித்துவரும் நிலையில் வணிக நிறுவனங்களில் அவ்வாறு இருந்தால் அந்த நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க சிறப்பு கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டிருக்கிறது.
இது தொடர்பாக திருநெல்வேலி மாநகராட்சி ஆணையர் ஜி.கண்ணன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
திருநெல்வேலி மாநகராட்சியில் பொதுமக்கள் அதிகமாக கூட்டம் கூடுவதைத் தடுக்கவும், சமூக விலகலை நடைமுறைப்படுத்தும் பொருட்டு மாநகராட்சியால் பல்வேறு நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்பட்டிருக்கிறது.
ஆனாலும், மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளிலுள்ள வணிக நிறுவனங்கள், இறைச்சிக்கடைகள், உணவகங்கள், தேநீர் கடைகள், மளிகைக்கடைகள், பல்பொருள் அங்காடி நிறுவனங்கள், காய்கனி விற்பனை நிலையங்கள், திருமண மண்டபங்கள், வழிபாட்டுத்தலங்கள், பேருந்து நிலையங்கள், ஜவுளி விற்பனை நிலையங்கள் மற்றும் பொது இடங்களில் பொதுமக்கள் சமூக இடைவெளி மற்றும் பாதுகாப்பு முகக்கவசமின்றி கூடுவது தெரிய வருகின்றது.
மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சமூக இடைவெளியை பின்பற்ற மக்களுக்கு அறிவுறுத்தவும், வணிக நிறுவனங்களுக்கு விதிமுறைகளை வகுத்தும் அளிக்கப்பட்டிருக்கிறது.
இதன் தொடர்ச்சியாக ஒவ்வொரு மண்டல உதவி ஆணையர் தலைமையில் சுகாதார அலுவலர், மாநகராட்சி அலுவலர்களைக் கொண்ட ஒரு சிறப்புக் கண்காணிப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
இக்குழுவானது, அரசு வழிகாட்டும் நெறிமுறைகளின்படி, பொது இடங்கள் மற்றும் சிறு, குறு வணிக நிறுவனங்கள், இறைச்சிக்கடைகள், உணவகங்கள், தேநீர் கடைகள், மளிகைக்கடைகள், பல்பொருள் அங்காடி நிறுவனங்கள், காய்கனி விற்பனை நிலையங்கள், திருமண மண்டபங்கள், வழிபாட்டுத்தலங்கள், பேருந்து நிலையங்கள், ஜவுளி விற்பனை நிலையங்கள், அழகு நிலையங்கள் ஆகிய இடங்களில் சமூக இடைவெளி மற்றும் பாதுகாப்பு முகக்கவசம் இன்றி வருபவர்களை முறையாக வழிநடத்தாத வணிக நிறுவனங்கள் மீது அபராதம் விதிப்பதுடன், தொடர் விதி மீறல் கண்டறியப்பட்டால், பூட்டி சீல் வைப்பதுடன், மேல்நடவடிக்கை தொடரப்படும்.
திருநெல்வேலி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வாழும் அனைத்துத்தரப்பு பொதுமக்களும், வணிக நிறுவனங்களின் உரிமையாளர்களும் அரசு வழிகாட்டும் நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.