நாகர்கோவிலில் முறையான அனுமதியின்றி செயல்பட்டு வந்த தியேட்டருடன் கூடிய வணிக வளாகத்திற்கு மாநகராட்சி அதிகாரிகள் இன்று சீல் வைத்தனர்.
நாகர்கோவிலில் மக்கள் போக்குவரத்து அதிகம் உள்ள செட்டிகுளம் சந்திப்பில் ராஜாஸ் மால் என்னும் வணிக வளாகம் உள்ளது. இதில் திரையரங்குகள், கடைகள், சூப்பர் மார்க்கெட் போன்றவை செயல்பட்டு வந்தன. இந்த வணிக வளாகக் கட்டிடம் முறையான அனுமதி பெறாமல் கட்டப்பட்டு செயல்பட்டு வந்ததாக தெரிகிறது.
இது தொடர்பாக நாகர்கோவில் மாநகராட்சி, மற்றும் உள்ளூர் திட்ட குழுமத்தினர் முறையான அனுமதி பெறுவதற்கு நோட்டீஸ் வழங்கியுள்ளனர். அதன் பின்னரும் தொடர்ந்து அனுமதி பெறாமல் செயல்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித் தலைமையில் அதிககாரிகள் இன்று வணிக வளாகத்திற்கு வந்தனர். அவர்கள் அனுமதியின்றி கட்டப்பட்டு செயல்பட்டு வருவதாக வணிக வளாகத்திற்கு சீல் வைத்தனர்.
இது தொடர்பான அறிவுப்பும் ஒட்டப்பட்டது. வணிக வளாகத்திற்கு சீல் வைக்கப்பட்டதையொட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
வணிக வளாகம் சீல் வைக்கப்பட்டதால் அங்கு செயல்பட்ட கடைகளுக்கு வந்த வியாபாரிகள், வாடிக்கையாளர்கள் திரும்பி சென்றனர். இதனால் செட்டிகுளம் பகுதியில் இன்று பரபரப்பு நிலவியது.