தமிழகம்

தட்டார்மடம் அருகே கடத்திக் கொலை செய்யப்பட்ட இளைஞர் செல்வனின் தாய் திடீர் மரணம்

ரெ.ஜாய்சன்

தூத்துக்குடி மாவட்டம் தட்டார்மடம் அருகே கடத்திக் கொலை செய்யப்பட்ட இளைஞரின் தாய் திடீரென இறந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தட்டார்மடம் அருகேயுள்ள சொக்கன்குடியிருப்பைச் சேர்ந்த தனிஸ்லாஸ் மகன் செல்வன் (35). இவர் கடந்த 17-ம் தேதி நிலத்தகராறு தொடர்பாக காரில் கடத்திக் கொலை செய்யப்பட்டார்.

இது தொடர்பாக தட்டார்மடம் காவல் ஆய்வாளராக இருந்த ஹரிகிருஷ்ணன், அதிமுக பிரமுகர் திருமணவேல் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இதில் 3 பேர் கைது செய்யப்பட்டனர். திருமணவேல் உள்ளிட்ட இருவர் சென்னை நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர். காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

செல்வனின் உறவினர்களின் தொடர் போராட்டம் காரணமாக இந்த வழக்கு சிபிசிஐடி போலீஸாருக்கு மாற்றப்பட்டது. காவல் ஆய்வாளர் உள்ளிட்ட 6 பேர் மீதும் சிபிசிஐடி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த வழக்கில் செல்வனின் தாய் எலிசபெத் (77) தான் புகார்தாரர். இவர் அளித்த புகார் அடிப்படையில் தான் திசையன்விளை போலீஸார் காவல் ஆய்வாளர் உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.

தனது மகன் செல்வன் கொலை செய்யப்பட்டதில் இருந்து எலிசபெத் மனச்சேர்வுடனே இருந்து வந்தார். இந்நிலையில் நேற்று இரவு 9 மணியளவில் வீட்டில் இருந்த போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு எலிசபெத் உயிரிழந்தார்.

முக்கியத்துவம் வாய்ந்த இந்த வழக்கில் புகார்தாரரான எலிசபெத் திடீரென மரணமடைந்திருப்பது தட்டார்மடம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக தட்டார்மடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT