விருதுநகர் மாவட்ட உரக்கடைகளில் ஆதார் அட்டை வைத்துள்ள விவசாயிகளுக்கு மட்டுமே உரம் விநியோகம் செய்யப்படும் என வேளாண் துறை அறிவித்துள்ளது.
இதுகுறித்து மாவட்ட வேளாண் இணை இணையக்குநர் ச.உத்தண்டராமன் கூறுகையில், "மாவட்டத்தில் உள்ள அனைத்து உரக்கடைகளிலும் பிஓஎஸ் கருவி மூலம் உரம் விற்பனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மத்திய அரசால் மாவட்டத்தின் மொத்த உர விற்பனையாளர்கள் மற்றும் நுகர்வோர்கள் தகவல்கள் மூலம் பயன்படுத்தப்படும் உரத்தின் மொத்த அளவு, உர வகைகள், பகுதி வாரியான உரத்தேவை ஆகியவை பிஓஎஸ் கருவி மூலம் துல்லியமாக கணக்கிடப்பட்டு வருகிறது.
உர உற்பத்தி மற்றும் உர விற்பனையில் நடைபெறும் முறைகேடுகளும், விவசாயம் அல்லாத துறைகளுக்கு விநியோகம் செய்யப்படுவதும் தடுக்கப்பட்டு வருகிறது.
வேளாண் துறை மூலம் வழங்கப்படும் தேசிய மண் வள அட்டையில் பரிந்துரைக்கப்பட்ட உர அளவைக் கொண்டு சமச்சீராக உரங்கள் இட முடியும்.
தேவைக்கு அதிகமாக உரங்கள் பயன்படுத்துவததைத் தவிர்க்க முடியும். மேலும் பதுக்கல், தட்டுப்பாடு, முறைகேடு போன்ற குறைகளை தவிர்க்க முடியும்.
எனவே, உரம் வாங்கச் செல்லும் விவசாயிகள் ஆதார் அட்டை எடுத்துச் செல்ல வேண்டும். அனைத்து உரக்கடைக்காரர்களுக்கு ஆதார் அட்டையிருந்தால் மட்டுமே உரம் விற்பனை செய்ய வேண்டும்.
விருதுநகர் மாவட்டத்தில் 21 மொத்த உர விற்பனை நிலையங்களும், 134 சில்லரை உர விற்பனை நிலையங்களும், 184 தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களும் உள்ளன. இவற்றின் மூலம் விவசாயிகளுக்கு தேவையான உரங்கள் வழங்கப்பட்டு வருகிறது.
இனி, உரம் வாங்க செல்லும் விவசாயிகள் ஆதார் அட்டை அவசியம் கொண்டு செல்ல வேண்டும்" என்றார்.