துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்: கோப்புப்படம் 
தமிழகம்

ஆதரவு நிர்வாகிகளுடன் ஓபிஎஸ் ஆலோசனை

செய்திப்பிரிவு

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தன் ஆதரவு நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு அனைத்துக் கட்சிகளும் தயாராகி வருகின்றன. ஆளும் அதிமுகவில் யார் முதல்வர் வேட்பாளர் என்ற சர்ச்சை எழுந்துள்ளது. இதுகுறித்து அண்மையில் நடைபெற்ற உயர்நிலைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இதையடுத்து, செப். 28 அன்று அதிமுக செயற்குழுக் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி, நேற்று, அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் செயற்குழுக் கூட்டம் சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், முதல்வர் வேட்பாளரை இப்போதே அறிவிக்க வேண்டும் என, மூத்த அமைச்சர்கள் வலியுறுத்தினர்.

முதல்வர் வேட்பாளர் யார் என்பதில் முதல்வர் பழனிசாமிக்கும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்கும் இடையே நேரடியாக வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் தகவல் வெளியானது.

கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களைச் சந்தித்த கே.பி.முனுசாமி, அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை, முதல்வரும் துணை முதல்வரும் சேர்ந்து அக். 7 அன்று அறிவிப்பார்கள் எனத் தெரிவித்தார்.

இந்நிலையில் கிரீன்வேஸ் சாலையில் உள்ள தனது இல்லத்தில், தன் ஆதரவு நிர்வாகிகளுடன் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்தினார். இதில், அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளர்கள் வைத்திலிங்கம், கே.பி.முனுசாமி, முன்னாள் எம்.பி. மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அக். 7 முதல்வர் வேட்பாளர் அறிவிப்பு, வழிகாட்டுதல் குழு அமைத்தல், அடுத்தகட்ட ஆலோசனைக் கூட்டம் உள்ளிட்டவை குறித்து இந்த ஆலோசனையில் ஓபிஎஸ் பேசியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ஆதரவு நிர்வாகிகளுடன் ஓபிஎஸ் ஆலோசனை நடத்தியது அரசியல் வட்டாரத்தில் முக்கிய நிகழ்வாகக் கருதப்படுகிறது.

முன்னதாக, ஒபிஎஸ் வீட்டுக்கு வருகை தந்த வைத்திலிங்கம், "வேறு விஷயமாக ஆலோசனை நடத்த உள்ளோம்" என்று மட்டும் கூறிச் சென்றார்.

SCROLL FOR NEXT