பிரதிநிதித்துவப் படம். 
தமிழகம்

கரோனா காலத்தில் வீட்டுக்குள் முடங்கிய பார்வை மாற்றுத்திறனாளிகள்: குழு அமைத்துக் கவனிக்க அரசுக்குக் கோரிக்கை

என்.சுவாமிநாதன்

கரோனா காலத்தில் சாலையைக் கடப்பதற்குக் கூட யாரும் கைப்பிடித்து உதவுவதில்லை என பார்வை மாற்றுத்திறனாளிகள் தரப்பிலிருந்து ஆதங்கக் குரல் ஒலிக்கிறது. கரோனா அச்சத்தால் தனிமைப்படுத்தப்பட்ட் நிலையில் நகர்கிறது பார்வையற்றவர்களின் வாழ்வு.

இதுகுறித்து நம்மிடம் பேசிய நாகர்கோவிலைச் சேர்ந்த பார்வை மாற்றுத்திறனாளியான கதிரேசன், ''இந்த உலகிலேயே தன்னுடைய சொந்த வீட்டுக்குப் போவதற்குக்கூட மற்றொருவரின் உதவி தேவைப்படுவது பார்வையற்றவர்களுக்கு மட்டும்தான். கடவுளே எங்களின் கஷ்டத்தைப் போக்க விரும்பி, பாதையில் வைரக்கல்லைப் போட்டால்கூட அதை எடுக்கும் யோகம் பார்வையற்றவர்களுக்கு இருக்காது. நீண்ட வாழ்க்கைப் பயணத்தில் எப்போதுமே மற்றொருவரின் உதவியோடே பயணிக்க வேண்டிய தேவை பார்வைக் குறைபாடு உடையவர்களுக்கு இருக்கிறது.

சொந்த வீட்டுக்குள் மட்டும் எந்தப் பொருள் எந்த இடத்தில் இருக்கும், எந்த இடத்தில் படிகள் இருக்கும் என்பதெல்லாம் தெரியும். இதேபோல் வழக்கமாகப் போய்வரும் வழிப்பாதையிலும் மற்றொருவரின் துணையின்றிச் செல்ல முடியும். ஆனால், புதிய இடம் என்றால் இன்னொருவரின் துணை கட்டாயம் தேவை. முன்பெல்லாம் சாலையைக் கடக்க நின்றால் யாரேனும் அவர்களாகவே வந்து கைப்பிடித்து நடத்திவிடுவார்கள். ஆனால், இப்போதைய சூழல் அப்படி இல்லை. தன்னிச்சையாக வந்து உதவ யாரும் வருவதில்லை. எங்கே கையைப் பிடித்து, சாலையைக் கடத்திவிட்டால் கரோனா வருமோ என அச்சம் அவர்களுக்கு வந்துள்ளது.

பார்வையற்றவர்களைப் பார்த்தால் வாகனத்தை நிறுத்தி தங்கள் வாகனங்களில் ஏற்றிக்கொண்டு போகும் வழியில் இறக்கிவிடும் பண்பும் இப்போது அடியோடு போய்விட்டது. ஊரடங்கு காலத்தில் இருந்தது போலவே, தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பின்னரும் வீட்டுக்குள் சுருங்கிக்கொண்டே வாழ வேண்டியிருக்கிறது. சிலருக்குக் குடும்ப உறவுகள் துணையாக இருக்கின்றன. ஆனால், இது அனைத்துப் பார்வையற்றோருக்கும் வாய்ப்பதில்லை. கண்ணுக்குத் தெரியாத கரோனாவோடு போர் புரியும் அரசு, கண்ணே தெரியாத எங்களைப் பற்றியும் யோசிக்க வேண்டும்.

அரசு பார்வையற்றவர்களின் பட்டியலைச் சேகரித்து அவர்கள் வீட்டை விட்டே வெளியே வராத அளவுக்கு அவர்களுக்குத் தேவையான மருந்து உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை விநியோகிக்கக் குழு அமைக்கலாம். அதற்கு உரிய கட்டணத்தை வாங்கிவிட்டு இந்தச் சேவையைச் செய்தால் எங்களைப் போன்ற பார்வையற்றோருக்கு மிகவும் உபயோகமாக இருக்கும்'' என்று கதிரேசன் கூறினார்.

SCROLL FOR NEXT