வேளாண் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆண்டிபட்டியில் திமுக சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அக்கட்சியின் மாநிலக் கொள்கை பரப்புச் செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் தலைமை வகித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
''எத்தனை செயற்குழு மற்றும் பொதுக் குழுவைக் கூட்டினாலும் தேர்தலுக்கு முன்பாக அதிமுகவால் முதல்வர் வேட்பாளரை அறிவிக்க முடியாது. அறிவிக்கும் துணிச்சலும் அவர்களிடம் இல்லை. திமுக கூட்டணியில் ஸ்டாலின்தான் முதல்வர் வேட்பாளர் என்று அனைவருக்கும் தெரியும். அவரை முன்னிலை படுத்தித்தான் நாங்கள் பிரச்சாரம் செய்வோம். அவர்தான் அடுத்த தமிழக முதல்வராக வருவார்.
இந்தத் துணிச்சல் பழனிசாமி அரசுக்கு இல்லை. அதிமுகவில் துணிச்சலான ஆளுமை இல்லாததால், முதல்வர் வேட்பாளரை அவர்களால் அறிவிக்கவே முடி யாது''.
இவ்வாறு தங்க தமிழ்ச்செல்வன் கூறினார்.