அமராவதி அணையில் பொதுப்பணித் துறையினர் பராமரித்து வரும் கற்றாழை பூங்கா சுற்றுலாப் பயணிகளை கவர்ந்து வருகிறது.
உடுமலை அடுத்த அமராவதி அணை உருவாக்கப்பட்டபோதே அதன் முகப்புப் பகுதியில் சிறுவர்களுக்கென பிரத்யேகமாக பூங்கா அமைக்கப்பட்டது. காலப்போக்கில் போதிய நிதி ஒதுக்கீடு இல்லாமல், போதிய பராமரிப்பின்றி பூங்கா பாழடைந்தது. இதற்கிடையே கடந்த 2010-ம் ஆண்டில் வறட்சியைத் தாங்கி வளரும் கற்றாழை மரங்கள் கொண்ட தனித்துவமான பூங்கா அமைக்கப்பட்டது.
இப்பூங்கா தற்போது பார்வையாளர்களை கவர்ந்து வருகிறது. இதுகுறித்து பொதுப்பணித் துறையினர் கூறும்போது, ‘‘அணைப் பூங்கா மேம்பாட்டுக்காக ரூ.3 கோடியில் திட்டம் தயாரிக்கப்பட்டு, அரசின் அனுமதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கற்றாழையில் 500 வகைகள் உள்ளன. சில கற்றாழை இனங்களே பாரம்பரியமாக மூலிகை மருந்தாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அமராவதி அணையில், சுமார் 30 சென்ட் பரப்பில் மிகப்பெரிய கற்றாழை பூங்கா உள்ளது. இங்கு சுமார் 50 வகையான கற்றாழைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன’’ என்றனர்.