ஏடிஎம் மையத்தில் தவறவிடப்பட்ட ரூ.15 ஆயிரம் பணம், ஏடிஎம் அட்டை ஆகியவற்றை கண்டெடுத்து, உரியவரிடம் ஒப்படைத்த தலைமை காவலருக்கு, திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்டோர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் அலங்கியம் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரியும் வீரராகவன், கடந்த சில தினங்களுக்கு முன் திருப்பூர் வந்தார். பெருமாநல்லூர் சாலை சாந்தி திரையரங்கம் அருகே தனியார் வங்கி ஏடிஎம் மையத்தில் பணம் எடுக்க சென்றுள்ளார். அப்போது, அங்கிருந்த ஏடிஎம் இயந்திரத்தின் மேல் ஒரு பர்ஸ் இருந்தது. அதை எடுத்து பார்த்தபோது, ரூ.15 ஆயிரம் பணமும், ஏழு ஏடிஎம் அட்டைகளும், ஓட்டுநர் உரிமமும் இருந்துள்ளன.
அதை பத்திரப்படுத்தி உரிய நபரிடம் ஒப்படைக்க வேண்டி, சமூக வலைதளங்களில் சம்பந்தப்பட்ட ஓட்டுநர் உரிமத்தை பதிவு செய்து, ஆதாரத்தை காட்டி பெற்றுச் செல்லலாம் என அவர் தெரிவித்திருந்தார். வாட்ஸ்-அப் குழுக்களிலும் இந்த தகவல் பகிரப்பட்டது.
இதற்கிடையே, வாட்ஸ்-அப் குழுக்கள் மூலமாக பகிரப்பட்ட தகவலை அறிந்து, தவறவிட்ட பர்ஸை திருப்பூர் திரு.வி.க. நகரை சேர்ந்த ரகு என்பவர் நேற்று முன்தினம் தலைமை காவலர் வீரராகவனை தொடர்பு கொண்டு பேசியதுடன், நேரில் சந்தித்து உரிய ஆதாரத்தை காட்டி பர்ஸை பெற்றுச் சென்றார். திருப்பூர் மாவட்ட காவல் துறையை சேர்ந்த தலைமை காவலரின் இந்த செயலை, காவல் கண்காணிப்பாளர் திஷா மித்தல் பாராட்டினார்.
சமூக ஊடகங்களிலும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.